

ஆளுநர் அலுவலகத்தையும், பிரதமரையும் மக்களிடையே தினமும் தவறாகச் சித்தரிப்பதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களைத் தடுப்பதாகக் கூறி ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வரும் 8-ம் தேதி நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில், முதல்வர் நாராயணசாமி பங்கேற்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஆளுநர் கிரண்பேடி தனது வாட்ஸ்அப்பில் இன்று (ஜன.2)வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் அலுவலகத்தின் செயல்பாட்டுக்கு எதிராக முதல்வர் வெளிப்படுத்திய வேதனையையும், ஏமாற்றத்தையும் புரிந்துகொள்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் அலுவலகமானது சட்ட விதிகளைக் கடுமையாகப் பின்பற்றி நேர்மையான மற்றும் மக்கள் எளிதில் அணுகக்கூடிய நிர்வாகமாக மாற்றியுள்ளதே இந்த மனநிலைக்குக் காரணமாக இருக்கக் கூடும்.
உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்த அறிவுறுத்தலின்டி ஆளுநர் அலுவலகம் செயலாற்றி வருகிறது. குறிப்பாக, மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அளவுக்குள் இருப்பதையும், அங்கீகரிக்கப்பட்ட பட்ஜெட் தலைப்புக்குள் இருப்பதையும் உறுதி செய்துள்ளது.
கரோனா, புயல் மேலாண்மை, கரோனா நடத்தை விதிகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றில் புதுச்சேரிக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்புத் தேவை என உறுதியாகத் தோன்றியதால், நான் இந்த விவகாரங்களில் நேரடியாகத் தலையிட்டேன்.
நல்ல நிர்வாகம், நேர்மையான முறையில் நடப்பதை உறுதி செய்வது துணைநிலை ஆளுநரின் கடமையாகும். இதற்குப் புதுச்சேரி மக்களுக்கு நன்றி கூறுகிறேன். என் தலையீடு தேவைப்படும் பல விஷயங்களை எம்எல்ஏக்கள் எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். கரோனா ஆரம்ப காலத்தில் கலால் துறையின் விதிமீறல்களை வெளிப்படுத்திய ஒரு எம்எல்ஏவின் மனு, சிபிஐ விசாரணையில் உள்ளதை நினைவுகூறுகிறேன்.
ஒரு நிர்வாகியாகவும், துணைநிலை ஆளுநராகவும், சட்டங்களுக்கும், விதிகளுக்கும் உட்பட்டு நான் எனது கடமையைச் செய்து வருகிறேன். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நடக்கும் துணைநிலை ஆளுநர் அலுவலகத்தையும், பிரதமரையும் மக்களிடையே தினமும் தவறாகச் சித்தரிப்பதை முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நேரடிப் பணப்பரிமாற்றத் திட்டத்தின் மூலம் கோடிக்கான ரூபாய் மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏல முறை, ஒப்பந்தம், தரகு, இடைத்தரகர்கள் இல்லாததால், ஊழல் பெருமளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரியின் பொருளாதாரத்தை வளர்த்து, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்துள்ளது.’’
இவ்வாறு ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.