

தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்ட கோரும் மு.க.ஸ்டாலின், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெற புதுச்சேரியில் சட்டப்பேரவையை கூட்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை வலியுறுத்தாதது ஏன்? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து, புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ இன்று (ஜன. 02) செய்தியாளர்களிடம் கூறுகையில், "விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வேளாண் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி ஆளும் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைக்கிறார்.
அவர் தனது கட்சி ஆதரவுடன் புதுச்சேரியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெறவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கவும், உரிய சட்டமசோதாவை கொண்டு வர சட்டப்பேரவையை கூட்ட கூட்டணியில் உள்ள முதல்வர் நாராயணசாமியை வலியுறுத்தாதது ஏன்?
புதுச்சேரியில் முதல்வர் அறிவுறுத்தலின்படி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ரூ.200 வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். சுமார் 3.40 குடும்பங்களில் 1.75 லட்சம் சிகப்பு அட்டை உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே இந்த ரூ.200 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்ற அனைவருக்கும் தொடர்ந்து ஒரு நலத்திட்டங்களை கூட வழங்காமல் துரோகத்தை இழைத்து வருகிறது.
காங்கிரஸ் கூட்டணி அரசு எவ்வளவு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினார்கள் என்று கூற முடியுமா? இலவச அரிசி சிகப்பு அட்டைதாரர்களுக்கு கொடுக்கும் மதிப்பீட்டில் பாதி மஞ்சள் அட்டைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பொங்கல் பரிசு மட்டும் மஞ்சள் அட்டைக்கு வழங்கவில்லை.
மதுபான விலையை உயர்த்த ஒருநாளைக்கு 3 முறை அமைச்சரவை கூட்டும் இந்த அரசு, ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொங்கல் பரிசு வழங்க இதுவரை ஏன் அமைச்சரவையை கூட்டவில்லை. துணைநிலை ஆளுநரை எதிர்த்து வருகிற 8-ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஆளும் அரசின் காலம் எண்ணப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஆளுநர் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வைத்த கோரிக்கைகள் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது. செயலற்ற ஆட்சியை மூடி மறைக்கவும், தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அரசு ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க முடிவெடுத்துள்ளனர்.
பல்வேறு பிரச்சினைகளில் தனிப்பட்ட முறையில் துணைநிலை ஆளுநரும், முதல்வரும் கைகோர்த்து செயல்படுகின்றனர். பல்வேறு முக்கிற விவகாரத்தில் அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு ஆளுநர் துணையாக இருக்கிறார். ஆனால், மக்கள் நலத்திட்டங்கள் வழங்குவதில் மட்டும் இருவரும் போட்டி போட்டு ஏமாற்றி வருகின்றனர்.
புத்தாண்டு மூலமாக புதுச்சேரிக்கு வந்த அதிகப்படியான வருமானம் எவ்வளவு என முதல்வர் நாராயணசாமி தெரிவிக்க முடியுமா? புதுச்சேரியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2,500 வழங்க வேண்டும். அதற்கான நிதி அனைத்தும் அரசிடம் உள்ளது. அரசின் அனைத்து சட்டவிரோத செயலுக்கும் கிரண்பேடி ஆதரவாக உள்ளார்.
உடனடியாக சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை முதல்வரால் சொல்ல முடியுமா? அவர்களை ஒன்றாக நிற்க வைக்க முடியுமா? அப்படி செய்தால் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார்" என்றார்.