புதுச்சேரியில் 9 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை; முதல்வர் நாராயணசாமி ஆய்வு
புதுச்சேரி மாநிலத்தில் இன்று 9 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நடைபெறும் தடுப்பூசி ஒத்திகையை முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கரோனா தொற்று இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் பரவத் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் மார்ச் முதல் அரசு ஊரடங்கு அமல்படுத்தியது. இந்தநிலையில், கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் தற்போது உருமாற்றம் அடைந்த கரோனா தொற்று பரவி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கரோனா தொற்றுக்கு 38 ஆயிரத்து 174 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 37 ஆயிரத்து 195 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் புதுச்சேரியில் மட்டும் 30 ஆயிரத்து 494 பேரும், காரைக்காலில் 3,791 பேரும், ஏனாமில் 2,102 பேரும், மாஹேவில் 1,787 பேரும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 633 உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், மத்திய அரசின் உத்தரவின்படி நாடு முழுவதும் இன்று (ஜன. 02) கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களிலும் 9 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகிறது.
இதற்காக, புதுச்சேரி சட்டப்பேரவை அருகே உள்ள இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை, கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், காரைக்காலில் 3 இடங்களிலும், மாஹே, ஏனாமில் தலா ஒரு இடங்களிலும் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இதில், தடுப்பூசி போடுவதற்கு தனி இடம், மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலை, தடுப்பூசி போடுவதற்கு முன்பு செய்யவேண்டிய மருத்துவ பரிசோதனைகள், தடுப்பூசி போட்டபின்பு அவர்கள் தங்க தனி அறைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஒத்திகை நடைபெறுகிறது. இப்பணியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் நடந்த கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியை முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக, அங்கு நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமையும் பார்வையிட்டார். அப்போது, மருத்துவக் கண்காணிப்பாளர் வாசுதேவன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரவி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
