

பொங்கல் முதல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையை மெய்நிகர் சுற்றுப்பயணம் (Virtual tour) மூலம் மக்கள் காண ஏற்பாடு செய்வது குறித்து அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆலோசனை நடத்தினார்.
புத்தாண்டையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸிலுள்ள கோயிலில் காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் அதிகாரிகள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து, அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலந்தாலோசித்தார். அதைத்தொடர்ந்து, வாட்ஸ் அப்பில் அவர் இன்று (ஜன. 01) வெளியிட்ட தகவல்:
"பொங்கல் தினத்திலிருந்து ராஜ்நிவாஸை மெய்நிகர் சுற்றுப்பயணம் (Virtual tour) மூலம் மக்கள் காண ஏற்பாடு செய்வது பற்றியும், அதற்கான தகவல் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தவும் கலந்தாலோசித்தோம்.
ஆளுநர் மாளிகையில் உள்ள பணியாளர்கள் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு மக்களின் குறைகளைக் காணொலி மூலம் தீர்க்க தகவல் தொழில்நுட்ப வசதியை கூடுதலாக வலுப்படுத்தப்படும்.
சாலைகள் சீரமைப்பது தொடர்பாக பொதுமக்கள் புகார் மீது பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும், அதேபோல் நீர்நிலை ஆக்கிரமிப்பில் வந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவும் விவாதிக்கப்பட்டது".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.