பழைய இரும்புக் கடையில் பாடப் புத்தகங்கள் விற்பனை: பள்ளிக்கல்வி ஊழியர் கைது

பழைய இரும்புக் கடையில் பாடப் புத்தகங்கள் விற்பனை: பள்ளிக்கல்வி ஊழியர் கைது
Updated on
1 min read

அரசு மற்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவசப் புத்தகங்களை இரும்புக் கடையில் விற்பனை செய்தது தொடர்பாக, பள்ளிக்கல்வி ஊழியர் மேகநாதனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை, முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்குச் சொந்தமாக இரும்புக் கடை உள்ளது. அந்தக் கடையில் இலவசப் பாடப் புத்தகங்கள் மூட்டை மூட்டையாகக் குவித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து விற்பனை செய்யப்படுவதாவும் புகார் எழுந்தது. புகாரின் பேரில், கோட்டாட்சியர் தலைமையிலான குழு இரும்புக் கடைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில், 2019- 2020ஆம் கல்வியாண்டுக்குரிய சுமார் 5 ஆயிரம் பாடப் புத்தகங்கள் இருந்ததும், அவை 6 முதல் 12-ம் வகுப்புக்கான புத்தகங்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்துப் புத்தகங்களைப் பறிமுதல் செய்த கோட்டாட்சியர், காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இரும்புக் கடை உரிமையாளர் பெருமாள் சாமியிடம் விசாரணை நடத்தினர். அதில் மாவட்டக் கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் புத்தகங்களை விற்றது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் மேகநாதனைக் கைது செய்த போலீஸார், அரசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரும்புக் கடை உரிமையாளர் பெருமாள்சாமியும் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறையில் அரசின் இலவசப் பள்ளிப் பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித்துறை அதிகாரியே விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in