சென்னையின் யுனெஸ்கோ பெருமைக்கு மியூசிக் அகாடமியின் மார்கழி இசைவிழா பிரதான காரணம்: ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி புகழாரம்

மியூசிக் அகாடமியின் 94-வது இசை விழாவை இணையத்தில் மெய்நிகர் வடிவில் நேற்று தொடங்கி வைத்து உரையாற்றும்  ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா.
மியூசிக் அகாடமியின் 94-வது இசை விழாவை இணையத்தில் மெய்நிகர் வடிவில் நேற்று தொடங்கி வைத்து உரையாற்றும் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா.
Updated on
1 min read

மியூசிக் அகாடமியின் 94-வது இசை விழாவை இணையத்தில் மெய்நிகர் வடிவில் நேற்று தொடங்கிவைத்த ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, சென்னையின் கலாச்சார பெருமைக்கு மியூசிக் அகாடமியின் மார்கழி இசை விழா பிரதான காரணம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:

மியூசிக் அகாடமியின் 94-வதுஇசை நிகழ்ச்சியை தொடங்கிவைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 2017-ல் யுனெஸ்கோ சென்னையை கலாச்சார பெருமை வாய்ந்த நகரங்களின் பட்டியலில் சேர்த்தது. அதற்கு 90 ஆண்டு பாரம்பரியமான மியூசிக் அகாடமியின் மார்கழி திருவிழா முதன்மையான காரணம்.

மியூசிக் அகாடமி வளர்ந்துவரும் இளம் கலைஞர்களுக்கும் பிரபல கலைஞர்களுக்கும் மேடை அளிக்கிறது. கரோனா பேரிடர் காரணமாக மியூசிக் அகாடமியின் நிகழ்ச்சிகள் முதன்முறையாக மெய்நிகர்(டிஜிட்டல்) வடிவில் எல்லைகளைக் கடந்து உலக அளவில் இருக்கும் இசை ரசிகர்களையும் சென்றடைய உள்ளது.

14 ஆண்டுகளாக மியூசிக் அகாடமியோடு இணைந்து இசை விழாவை ஹெச்.சி.எல். தொடர்ந்துநடத்துகிறது. இந்த ஆண்டும் 8 நாட்களுக்கு இணையம் வழியில் மெய்நிகர் வடிவில் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள் கலைஞர்கள். மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் வரும் புத்தாண்டில் மலரட் டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வரவேற்புரையாற்றிய மியூசிக் அகாடமியின் தலைவர்என்.முரளி, “ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸின் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, மிகச் சிறிய வயதிலேயே பெரிய நிறுவனத்தின் தலைவர் பொறுப்புக்கு உயர்ந்திருப்பவர். அவர் மியூசிக் அகாடமியின் இசை நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தகவல் தொழில்நுட்பவியலாளர், ஊடகவியலாளர், இயற்கை ஆர்வலர், கல்வியாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் ரோஷ்னி. அவருக்கு கர்னாடக இசையிலும் தேர்ச்சி உண்டு. அவரின் தந்தை ஷிவ் நாடார் வழியில் ரோஷ்னியும் மியூசிக் அகாடமியின் இசை நிகழ்ச்சிகளை தொடங்கிவைப்பதில் மகிழ்கிறேன்.

மியூசிக் அகாடமியின் இசைநிகழ்ச்சிகள் 1929 முதல் தொடர்ந்துநடந்து வருகிறது. இந்த ஆண்டுகரோனா பேரிடரில், தொடரும்பாரம்பரியத்தையும் காப்பாற்றவேண்டும். அதேசமயம், ரசிகர்களுக்கும் கலைஞர்களுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது என்னும் இரண்டு சவால்கள் எங்கள் முன் இருந்தன. அதனால் இந்த மெய்நிகர் வடிவில் இசை நிகழ்ச்சிகளை தருவது என்று முடிவெடுத்தோம்.

கரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு டிச.24 தொடங்கி 31-ம் தேதிவரை 8 நாட்களுக்கு மட்டுமே நடக்கிறது. எப்போதும் 75 கச்சேரிகள் நடக்கும். இந்த முறை 27 கச்சேரிகள்தான் நடக்க உள்ளன” என்றார்.

மேலும், மறைந்த இசை மேதை வயலின் வித்வான் டி.என்.கிருஷ்ணன், கர்னாடக இசைப் பாடகர் பி.எஸ்.நாராயணசுவாமி, வயலின் வித்வாம்சினி டி.ருக்மிணி ஆகியோரின் நினைவுகளையும் என்.முரளி பகிர்ந்து கொண்டார்.

முதல் நாள் நிகழ்ச்சியாக செம்பனார்கோவில் எஸ்.ஆர்.ஜி.எஸ்.மோகன்தாஸ், மயிலை கே.செல்வம் குழுவினரின் நாதஸ்வர கச்சேரியும் தொடர்ந்து குன்னக்குடி எம்.பாலமுரளி கிருஷ்ணாவின் கச்சேரியும் நடந்தது.

இசைவிழா நிகழ்ச்சிகளை https://musicacademymadras.in/94th-annual-concerts-digital-2020/ என்ற இணையதள லிங்க்கில் காணலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in