அனல் மின் நிலையங்களில் விபத்துகளை தடுக்க 6 மாதங்களுக்குள் பாதுகாப்பு தணிக்கை: நிலக்கரி அமைச்சக செயலருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

அனல் மின் நிலையங்களில் விபத்துகளை தடுக்க 6 மாதங்களுக்குள் பாதுகாப்பு தணிக்கை: நிலக்கரி அமைச்சக செயலருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, அடுத்த 6 மாதங்களுக்குள் பாதுகாப்பு தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று மத்திய நிலக்கரி அமைச்சக செயலருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி கொதிகலன் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். இந்நிகழ்வு தொடர்பான செய்தி ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. அதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த விபத்து தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கடலூர் மாவட்ட நீதிபதி, ஐஐடி பேராசிரியர், நீரி அமைப்பு வல்லுநர் ஆகியோர் கொண்ட வல்லுநர்கள் குழுவை அமைத்திருந்தது. அக்குழுவும், நேரில் ஆய்வு செய்து கடந்த அக்டோபர் மாதம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த வழக்கு, அமர்வின் தலைவர் ஏ.கே.கோயல், நீதித்துறை உறுப்பினர் எஸ்.கே.சிங், தொழில்நுட்ப உறுப்பினர்கள் எஸ்.எஸ்.கார்ப்யல், நாகின் நந்தா ஆகியோர் முன்னிலையில் கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. பின்னர் அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

வல்லுநர்கள் குழு தாக்கல் செய்த ஆய்வறிக்கை விவரங்களை பார்க்கும்போது, அனல்மின் நிலைய கொதிகலனை தூய்மைப்படுத்துவதற்கு தனி நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படவில்லை. பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. பயிற்சி பெற்ற ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை என்பது தெரியவருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 கோடியே 57 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடந்த விபத்துக்கு என்எல்சி நிர்வாகமும், அதன் அனல்மின் நிலைய இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை அதிகாரியும், பாதுகாப்பு அதிகாரியுமே பொறுப்பு. இதுபோன்ற விபத்துகளை தடுக்க, மத்திய நிலக்கரி மற்றும் மின்சாரத் துறை அமைச்சகத்தின் செயலர், உரிய மாநில துறைகளுடன் இணைந்து, வல்லுநர்களின் ஆய்வறிக்கை விவரங்கள் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள அனல் மின்நிலையங்களில் அடுத்த 6 மாதங்களுக்குள் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in