

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி வரும் 23-ம்தேதி பேரூராட்சிகள் முன்பு நடக்கும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இம்மாதத்தின் முதல் நாளில் போராடத் தொடங்கியதில் இருந்து இன்று வரை நமதுவலிமை அறவழியில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. டிசம்பர் 1 முதல் 4-ம் தேதி வரைசென்னையில் நாம் நடத்திய போராட்டங்களுக்கு அனைத்துதடைகளையும் மீறி பல்லாயிரக்கணக்கில் பாட்டாளி சொந்தங்கள் திரண்டனர்.
இந்த சாதனையை முறியடிக்க முடியும் என்பதை கடந்த 14-ம் தேதி தமிழகம் முழுவதும் 12,621 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன்பு நடத்திய போராட்டத்தில் நிரூபித்துக் காட்டினீர்கள். அந்தப் போராட்டத்தில் மட்டும் 30 லட்சத்துக்கும் கூடுதலான தம்பி, தங்கைகள் உள்ளிட்ட பாட்டாளி சொந்தங்கள் பங்கேற்றனர்.
வரும் 23-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 528 பேரூராட்சிகள் முன்பு நடக்கவுள்ள மக்கள்திரள் போராட்டத்தில் இந்த சாதனையும் தகர்க்கப்பட்டு, புதிய சாதனை படைக்கப்படும். அதைப் பார்க்க தயாராகுங்கள் என்று நீங்கள் நினைப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு போராட்டத்திலும் முந்தைய போராட்டத்தைவிட கூடுதலாக திரள்கின்றனர் என்றால் அதற்கு காரணம் நமது கோரிக்கையில் உள்ள நியாயம்தான். அதுதான் பாட்டாளிகளை படை திரட்டி போராட்டக் களத்துக்கு அழைத்து வருகிறது.
இந்தப் போராட்டமே 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டுக்கான நமது இறுதி போராட்டமாக அமைய வேண்டும். போராட்டத்தின் வலிமையைப் பார்த்து நமது கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அந்தஅளவுக்கு இந்த மக்கள்திரள் போராட்டத்தை வெற்றிகரமாக பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும், பிற அமைப்புகளும் இணைந்து நடத்த வேண்டும். தம்பிகள், தங்கைகள், இளைஞர்கள் பெருந்திரளாக திரண்டு வரவேண்டும். மாற்று கட்சிகளில் உள்ள பாட்டாளி சொந்தங்கள், சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் போராட்டத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.