

திருப்பத்தூர் மாவட்டத்தில் திறக்கப்பட உள்ள 14 மினி கிளினிக் மூலம் 1.73 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
கிராமப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக மாநிலம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகளைத் திறக்க அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 இடங்களில் மினி கிளினிக் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதில், முதல் கட்டமாக இடையம்பட்டி, பொன்னேரி, விஷமங்கலம், மாடப்பள்ளி, பெருமாப்பட்டு, பூங்குளம் ஆகிய 6 இடங்களில் மினி கிளினிக் திறப்பு விழா இன்று (டிச.17) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, கரோனா கட்டுப்பாட்டு அதிகாரி சுமதி வரவேற்றார்.
தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு 6 இடங்களில் மினி கிளினிக்குகளைத் திறந்து வைத்தனர்.
அப்போது, அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:
"மாநிலம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகளைத் திறப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 106 மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 46 மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன.
முதல் கட்டமாக 14 இடங்களில் மினி கிளினிக் திறக்க தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டியில் இன்று திறக்கப்பட்டுள்ள மினி கிளினிக் விரைவில் துணை சுகாதார நிலையமாகத் தரம் உயர்த்தப்படும். அதேபோல, பொன்னேரியில் திறக்கப்பட்டுள்ள மினி கிளினிக் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாகத் தரம் உயர்த்தப்படும். இந்த மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ உதவியாளர் பணியில் இருப்பார்கள். கிராமப்புற மக்கள் மருத்துவமனையைத் தேடி நீண்ட தொலைவுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திறக்கப்பட உள்ள 14 மினி கிளினிக்குகள் மூலம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 379 பேர் பயன்பெறுவார்கள். இந்த மினி கிளினிக்குகள் தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மினி கிளினிக்குகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம், கூட்டுறவுத் துறை சார்பில் ஈவுத்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, அரசு மருத்துவர்கள் சுமன், புகழேந்தி, சுகாதார ஆய்வாளர் கோபி உட்பட பலர் கலந்துகொண்டனர்.