

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயதைக் கடந்த திமுக மூத்த முன்னோடிகள் 500 பேருக்கு டிசம்பர் 23-ம் தேதி பொற்கிழி வழங்கப்படுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில் மாவட்ட வாரியாகக் காணொலி மூலம் தேர்தல் சிறப்புப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இதுவரை இரண்டு கட்டங்களாக இந்தக் கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டமாக 11 மாவட்டங்களுக்கான காணொலிக் கூட்டங்கள் டிசம்பர் 12-ல் தொடங்கி 31-ம் தேதி வரை நடக்கின்றன.
இதன்படி டிசம்பர் 23-ம் தேதி சிவகங்கை மாவட்டத்துக்கான தேர்தல் சிறப்புப் பிரச்சாரக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், 70 வயதைக் கடந்த திமுக மூத்த முன்னோடிகள் மற்றும் அவர்களது மனைவியர் பொற்கிழி வழங்கிக் கவுரவிக்கப்படுகிறார்கள்.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் பேசிய காரைக்குடி நகரத் திமுக செயலாளர் குணசேகரன் கூறியதாவது:
''திமுக தலைவரின் பிரச்சாரக் கூட்டத்தைக் காணொலி வழியாக நேரலை செய்வதற்குச் சிவகங்கை மாவட்டத்தில், 200 திருமண மண்டபங்களில் ஏற்பாடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 150 நிகழ்விடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில்லாமல் ஒட்டுமொத்த மாவட்டத்துக்குமான 'தமிழகம் மீட்போம்' சிறப்புப் பிரச்சாரக் கூட்டத்தை நடத்துவதற்குக் காரைக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகக் காரைக்குடியில் 6 இடங்களில் திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பிஎல்பி மஹாலில் நடைபெறும் கூட்டத்தில், வயது 70-ஐக் கடந்த திமுக முன்னோடிகள் 500 பேருக்குப் பொற்கிழி வழங்கிக் கவுரவிக்கப்படுகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் காணொலியில் முன்னிலை வகிக்க, சிவகங்கை மாவட்டத் திமுக செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் பொற்கிழிகளை வழங்குகிறார். பொற்கிழி பெறும் முன்னோடிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பதக்கமும், ஷீல்டும் வழங்கப்படும். அத்துடன் ஆண்களாய் இருந்தால் வேட்டி, சட்டை, துண்டும், பெண்களாக இருந்தால் சேலை, ஜாக்கெட்டும் வழங்கப்படும்.''
இவ்வாறு குணசேகரன் தெரிவித்தார்.
சிவங்கை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதால் விழாவுக்கான ஏற்பாடுகளை விரிவாகச் செய்து வருகிறது காரைக்குடி நகர திமுக. இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி நகரத் திமுக செயலாளர் குணசேகரன், துணைச் செயலாளர் சொ.கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வார்டு வாரியாகத் திமுக நிர்வாகிகளின் இல்லங்களுக்கு இன்று காலை முதல் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.