

கோவையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு, இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோாிக்கையை வலியுறுத்தியும், மேற்கண்ட கோரிக்கைக்காக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின், கோவை மாவட்டப் பிரிவு சார்பில், அதன் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில், கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் இன்று (டிச. 14) நடத்தப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின், கோவை மாவட்டப் பிரிவைச் சேர்ந்த விவசாயிகள், அதன் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று திரண்டனர். அவர்களுடன் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கோவை மாவட்டப் பிரிவு நிர்வாகிகள், தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்டவற்றின் நிர்வாகிகளும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
பின்னர், இவர்கள் ஒருங்கிணைந்து, மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் முன்பு, தபால் நிலையம் சாலையில் அமர்ந்து இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை கைது செய்தனர்.
மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை
அப்போது ஒருங்கிணைப்புக் குழுவின் கோவை மாவட்டப் பிரிவின் தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, "பல்வேறு வகைகளில் எங்களது போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும். இதற்காக அனைத்து அரசியல் கட்சியினர், அனைத்து விவசாய அமைப்புகளின் ஆதரவு பெறப்படும். அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து விரைவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும், மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும் விரைவில் நடத்தப்படும்" என்றார்.