

நிவர் மற்றும் புரெவி புயலின்போது பெய்த கனமழையால் தேங்கிய தண்ணீர் வடியாத நிலையில் புதுச்சேரியில் நெற்பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் நிவர் மற்றும் புரெவி புயலின்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கிராமப்புறங்களில் விளைநிலங்களிலும் மழைநீர் அதிகளவில் தேங்கியது.
இதன் காரணமாக, பாகூர், கரிக்கலாம்பாக்கம், தொண்டமாநத்தம், ராமநாதபுரம், ஆதிங்கப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதில், சில பகுதியில் நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தவை என்பதும், நெற்பயிர்கள் கதிர்வரும் தருவாயில் இருந்தவை என்பதும் தான் வேதனையின் உச்சமாகும். நெல் வயல்களை சூழ்ந்த வெள்ள நீரை விவசாயிகள் வடிய வைத்தும் இன்னும் வடிந்தபாடில்லை.
"மழை நீர் முழுமையாக வடியாததால் மேலும் பல ஏக்கரிலான பயிர்கள் அனைத்தும் நிலத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றவும் உதவிட வேண்டும்" என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், "தொடர் மழையால் தண்ணீர் தொடர்ந்து தேங்கி நின்றதால் பயிர்கள் மூழ்கின. தண்ணீர் ஓரளவு வடிந்தாலும் பயிர்கள் முழுமையாக அழுகியுள்ளன. நகையை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவிட்டு பயிரிட்டுள்ளோம். ஆனால், பயிர்கள் முழுவதும் அழுகியதால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் உழவு செய்ய வேண்டுமென்றால் பெரிய அளவில் கடன் ஏற்படும்.
விதை நெல் விலை, ஆள் கூலி என அனைத்தும் அதிகமாகிவிட்டது. மீண்டும் பயிர் செய்ய வேண்டுமானால் இன்னும் அதிகளவு கடன் ஏற்படும். எனவே, சேதமான பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். விரைந்து வழங்கினால் தான் அடுத்த போகத்துக்கு எங்களால் பயிர் செய்ய முடியும். தொடர் மழையால் இந்தாண்டு புதுச்சேரியில் விளைச்சலும் குறைந்துள்ளது.
மத்திய அரசு விவசாயிகள் நலனுக்காக கிசான் கடன் அட்டை அறிவித்துள்ளது. இதற்காக எங்களுக்கு நிலம் இருந்தும் பட்டாவை மாற்றம் செய்ய முடியவில்லை. வருவாய் துறையினர் பட்டா மாற்றம் செய்து வந்தால் மட்டுமே கிசான் கடன் அட்டை வழங்க முடியும் என்கின்றனர். இதனைப் பெற கடந்த 2 மாதமாக போராடி வருகிறோம்.
பிரதமர் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 வாங்குகிறோம். இதனைப் பெறும் அனைத்து விவசாயிகளும் கிசான் அட்டை பெறத் தகுதியானவர்கள் தான். ஆனாலும், கிசான் கடன் அட்டை வழங்காமல் வங்கியிலும், வருவாய் துறையிலும் தொடர்ந்து எங்களை அலைகழிக்கின்றனர். எனவே, கிசான் கடன் அட்டை பெற்று விவசாயிகள் பயன்பெற அரசு ஆவணம் செய்ய வேண்டும்" என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.