உயர் கல்வி இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற பரிந்துரையை நிராகரிக்க வைகோ வலியுறுத்தல்

உயர் கல்வி இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற பரிந்துரையை நிராகரிக்க வைகோ வலியுறுத்தல்
Updated on
1 min read

உயர் கல்வியில் இட ஒதுக்கீடு முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பரிந்துரையை மத்திய, மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உயர்நிலை மருத்துவப் படிப்புகளுக்கு பூர்வீக இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ''தொழில் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இட ஒதுக்கீட்டு சலுகையினால் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது நாட்டின் பொதுநலன் கருதி சிறப்பு மருத்துவ பட்டப் படிப்புகளில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறையை மாற்ற மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய மருத்துவக் கழகமும் இது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்க வேண்டும். நாடு விடுதலை பெற்ற 68 ஆண்டு காலத்தில் இட ஒதுக்கீட்டுச் சலுகை வழங்குவதில் எந்த மாற்றமும செய்யப்படவில்லை. உயர்கல்வி நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் மட்டுமே இடங்களை பூர்த்தி செய்வதற்கு மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், எந்த விதத்திலும் இட ஒதுக்கீடு முறை தொடர அனுமதிக்கக் கூடாது” என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டு முறை செல்லும் என்றே உச்ச நீதிமன்றம் 2006 மற்றும் 2008-ல் தீர்ப்பளித்தது. எனவே, சமூக நீதிக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய பரிந்துரையை மத்திய, மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in