

மதுரையில் தீயணைப்புத்துறை பரிந்துரை அடிப்படை யில் ஜவுளிக் கடை உள்ளிட்ட 5 வர்த்தக நிறுவனங்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை நகரில் நவ.,14-ம் தேதி தீபாவளி தினத்தன்று விளக்குதூண் பகுதியில் ஜவுளிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைத்தபோது, கட்டிடம் இடிந்து விழுந்து கிருஷ்ணமூர்த்தி, சிவராஜன் ஆகிய தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
40 ஆண்டுகளுக்கு மேலான கட்டிடம் என்பதால் கட்டிடம் இடிந்தது தெரியவந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை நகரில் முறையான தீ தடுப்பு உபகரணங்கள், விபத்து ஏற்படும்போது, தப்பிக்க இருவழிபாதை வசதி, பாதுகாப்பற்ற பழமையான கட்டிடங்களை கணக்கெடுத்து, நோட்டீஸ் வழங்க தமிழக தீயணைப்பு, மீட்புத்துறை இயக்குநர் ஜாபர் சேட் உத்தரவிட்டார்.
இதன்படி, மதுரையில் வெளியூர், உள்ளூர் தீயணைப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட நெருக்கடியான வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் பகுதியை ஆய்வு மேற்கொண்டனர்.
பாதுகாப்பற்ற பழைய கட்டிடம் உள்ளிட்ட பாது காப்பு இல்லாத சுமார் 800-க்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன.
விதிமுறைகளை பின்பற்றி, முறைப்படுத்தவேண்டும் என, குறிப்பிட்ட அவகாசம் கொடுத்து, சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனம், கடை உரிமையாளர்களுக்கு தீயணைப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், இந்த ஆய்வின்போது, விளக்குத்தூண் பகுதியில் மிகவும் பழமையான பாதுகாப்பற்ற சூழலில் நவுபத்கான், மஞ்சனக்காரர் தெரு பகுதியில் இருந்த 4 ஜவுளிக்கடை, பேன்சி ஸ்டோர் என, 5 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, தீயணைப்புத்துறை மதுரை மாநகராட்சி நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து இன்று 3 ஜவுளிக்கடைகள், மூடிக் கிடக்கும் 2 வர்த்தக நிறுவனங்களும் மாநகராட்சி அதிகாரிகள் ஜீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
இது குறித்து தீயணைப்புத்துறையினர் கூறுகையில், ‘‘ மதுரையில் இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொது மக்கள், ஊழியர்கள் பாதுகாப்பு கருதி பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தீயணைப்பு துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன.
மதுரையிலும் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் மாசிவீதிகளை சுற்றிலும் குறைபாடு கண்டறிந்த சுமார் 800க்கும் மேற்பட்ட வர்த்தக நிறு வனங்கள், கடைகளுக்கு முன்னெச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.
குறித்த நாட்களுக்குள், நாங்கள் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யவில்லை என, மாநகராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்,’’ என்றனர்.