

கடந்த 9 மாதங்களாக ஏமன் நாட்டின் பிடியில் சிக்கியிருந்த கடலூர் இளைஞர் உள்ளிட்ட 14 இந்தியர்கள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெளியிட்ட செய்தியின் வாயிலாக இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 14 பேர் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், வேலைக்காக சவுதி அரேபியா சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து கடந்த பிப்ரவரி மாதம், எகிப்து செல்லக் கப்பலில் பயணித்துள்ளனர்.
அப்போது சூறாவளிக் காற்றில் கப்பல் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சவுதி அரேபியாவுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மீண்டும் அனுப்பப்பட்ட கப்பலில் அவர்கள் சவுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வடக்கு ஏமனைச் சேர்ந்த கடல் பாதுகாப்புப் படையினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்து, அந்நாட்டின் சனா தீவில் சிறை வைத்தனர்.
தாங்கள் சிறை வைக்கப்பட்டிருப்பது குறித்து, 14 பேரும் கடந்த பிப்.21-ம் தேதி வாட்ஸ்அப்பில் தங்கள் உறவினர்களுக்குத் தெரிவித்தனர். இந்த 15 பேரில் கடலூரை அடுத்த வைரன்குப்பத்தைச் சேர்ந்த தணிகாசலம் மகன் மோகன்ராஜ் (37) என்பவரும் ஒருவர். இரு தினங்களுக்கு ஒருமுறை தனது குடும்பத்தினருடன் பேசும் மோகன்ராஜ், தன்னை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் மோகன்ராஜ் உள்ளிட்ட 14 இந்தியர்களை ஏமன் கடற்படையினர் சிறைப்பிடித்த செய்தியைக் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி ’இந்து தமிழ் திசை’ வெளியிட்டது. இதையறிந்த இந்திய வெளியுறவுத்துறை, ஏமனில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் தொடர் முயற்சி மேற்கொண்டு கடந்த நவம்பர் 18-ம் தேதி ஏமன் நாட்டுக் கடற்படையிடமிருந்து 14 இந்தியர்களை மீட்டது. இதையடுத்து அவர்கள் நேற்று சொந்த ஊர் திரும்பினர்.
9 மாதங்களுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய கடலூர் வைரன்குப்பத்தைச் சேர்ந்த மோகன்ராஜிடம் பேசியபோது, ''கடந்த பிப்ரவரி 18-ம் தேதி ஏமன் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டோம். அந்நாட்டினர் எங்களைக் கைதியாக அணுகவில்லை. நாங்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவலறிந்த இந்திய வெளியுறவுத்துறை, இதைச் சாதுரியமாக அணுகி எங்களை மீட்டுள்ளது. இதற்குப் பத்திரிகைகளுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். குறிப்பாக ’இந்து தமிழ் திசை’ பாய்ச்சிய வெளிச்சம் முக்கியக் காரணம்.
கடந்த 10 மாதங்களாக எவ்வித வருமானமும் இல்லை. சவுதி அரேபியாவில் உள்ள மகாராஷ்டிர வளைகுடா வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவர் சுனில் மஞ்ரேக்கர் என்பவர் நாங்கள் சிறைபிடிக்கப்பட்டது முதல் தொடர்ந்து எங்களிடம் தொடர்பில் இருந்து பல்வேறு உதவிகளைச் செய்ததோடு, தற்போது நாங்கள் பணி செய்த நிறுவனத்திடமும் ஊதியத்திற்காகப் பேசிக் கொண்டிருக்கிறார். புதுச்சேரியைச் சேர்ந்த சிவராஜ் போன்றவர்களும் எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த சம்பவம் எங்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது'' என்றார்.