

தமிழகத்தில் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பணிப் பாதுகாப்பு மட்டும் கொடுத்துள்ள நிலையில், இதுவரை நிரந்தரத் தீர்வு அரசாணை வெளியிடாதது வேதனை அளிக்கிறது என பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிவஞானம் கூறியதாவது:
சந்துரு, பூபதி கட்டாயக்கல்விச் சட்டத்தை (ஆர்டிஇ) மத்திய அரசு 2010 ஆகஸ்டு 23ல் அமல்படுத்தியது. இதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு அமலாக்கம் செய்த தேதிக்கும் முன்னதாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களில் அரசு மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ‘ டெட் ’ தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் இல்லை என்ற உத்தரவு நீதிமன்றம் வாயிலாகவும், அரசு உத்தரவு மூலம் அரசு செயல் முறைகள் வெளியீடு செய்யப்பட்டன.
அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர் கள் பணி நியமனங்கள் 2012 நவ., 16ம் தேதியிட்ட பள்ளிக்கல்வி இயக்குநர் செயல் முறைகளின் அடிப்படையில், இனிமேல் பணி நியமனங்கள் மேற்கொள்ளும்போது, டெட் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே தேர்வு செய்யவேண்டும் என அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் செயலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
2010 செப்., 23 முதல் 2012 நவ., 16க்கு இடையில் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் கட்டாயம் என்ற நிபந்தனை பற்றி தெரியாமல் பள்ளிக்கல்வி செயலாளர்கள் மாவட்ட கல்வி, முதன்மைக் கல்வி அலுவலர்கள் , உயர் அதிகாரிகள் மூலமாக பணி நியமனங்களுக்கு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டது.
டெட் தேர்ச்சி பெறவேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்து ஆங்காங்கே இது தொடர்பான வழக்குகளும் பதிவாகின. இதனைத்தொடர்ந்து நீதிமன்றங்களின் அறிவுறுத்தல் அடிப்படையிலும், தமிழக அரசின் கருணையிலும் இன்று வரை டெட் நிபந்தனை ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது தவிர, பதவி உயர்வு வேறு எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை.
நிரந்தர தீர்வு, வழக்குகளை முடிவுக்கு வர ஒரே வழி , அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘டெட்’ விலக்கு அளித்தது போன்று, 10 ஆண்டுகளாக பணியிலுள்ள டெட் நிபந்தனை ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பிற்கான அரசாணையை வெளியிட வேண்டும்.
இது குறித்து ஆசிரியர் சங்கங்களும், பாதிக்கப்பட்ட 1400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் குடும்பத்தினரும் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளோம். விரைவில் நல்ல முடிவு வரும் என, எதிர்பார்க்கிறோம், என்றனர்.