முறைகேடு புகார்கள் தொடர்பாக தனது தரப்பு நியாயங்களை விளக்கி ஆளுநருக்கு அண்ணா பல்கலை. துணைவேந்தர் சுரப்பா கடிதம்: விசாரணை ஆணையத்தில் ஆஜராகி பல்கலை. பதிவாளர் விளக்கம்

முறைகேடு புகார்கள் தொடர்பாக தனது தரப்பு நியாயங்களை விளக்கி ஆளுநருக்கு அண்ணா பல்கலை. துணைவேந்தர் சுரப்பா கடிதம்: விசாரணை ஆணையத்தில் ஆஜராகி பல்கலை. பதிவாளர் விளக்கம்
Updated on
1 min read

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தனது தரப்புநியாயங்களை விளக்கி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீதான முறைகேடு புகார்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இதற்கிடையே, சுரப்பாவுக்கு எதிராகவிசாரணைக்கு உத்தரவிட்டது நியாயமற்ற செயல் என்றும் இதுதங்களின் அதிகார துஷ்பிரயோகம் என்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், துணைவேந்தர் சுரப்பா தனது தரப்பு நியாயங்களை விளக்கி, பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர்கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு பல்வேறு தரப்பில் போட்டிகள் இருந்தது. ஆனால், தமிழக ஆளுநர் கர்நாடகாவைச் சேர்ந்த சுரப்பாவை நியமனம் செய்தார். அன்றுமுதலே சுரப்பா மீது பல்வேறு தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். இதனை வேந்தர் என்ற முறையில் ஆளுநரிடம் நேரிலும் தொலைபேசியிலும் பலமுறை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு எதிராக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் குறித்து தொலைபேசி மூலம் ஆளுநரிடம் சுரப்பா விளக்கமாக பேசியுள்ளார். மேலும், தனது தரப்பு நியாயங்களையும், எதற்காக என் மீது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் விளக்கமாக ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பதிவாளர் ஆஜராகி விளக்கம்

நீதிபதி கலையரசன் விசாரணைஆணையத்துக்கு சென்னை பசுமைவழி சாலையில் உள்ள பொதிகை இல்லத்தில் விசாரணை அலுவலகம் ஒதுக்கப்பட்டது. சுரப்பா மற்றும் பல்கலைக்கழகம் குறித்து புகார்கள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் 9-ம் தேதி (இன்று) வரை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பல்கலைக்கழகம் தொடர்பாக பதிவாளர் கருணாமூர்த்தி ஏற்கெனவே வழங்கிய ஆவணங்களை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். அதில் சில முக்கிய ஆவணங்கள் இல்லாததால், அதுகுறித்து விளக்கம் அளிக்கவும், பேராசிரியர் பணிநியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் விசாரணை அலுவலகத்தில் பதிவாளர் கருணாமூர்த்தி 8-ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, பதிவாளர் கருணாமூர்த்தி நேற்று ஆவணங்களுடன் விசாரணை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பேராசிரியர்கள், சில அலுவலர்களும் உடன் வந்தனர். பேராசிரியர் நியமனம், நிதி பங்கீடு, பல்கலைக்கழக வரவு செலவு கணக்குகள் அடங்கிய ஆவணங்களை பதிவாளர் வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in