

பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக ஈரோட்டில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு நகரில் இன்று (டிச. 08) முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக தினசரி காய்கறி மார்க்கெட் அடைக்கப்பட்டு இருந்தது. இதர வணிக வளாகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கின. முழு அடைப்பு காரணமாக பேருந்து மற்றும் ஆட்டோ இயக்கத்தில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை.
இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு, வீரப்பன்சத்திரம், மூலப்பட்டறை உள்ளிட்ட மூன்று இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், பவானி, மொடக்குறிச்சி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
புறநகர் பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பெருந்துறையில் காய்கறி சந்தை, பனியன் நிறுவனங்கள் இயங்கவில்லை. முழு அடைப்புப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், ஈரோட்டில் நடந்த மறியல் போராட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை.