

நிவர் புயல் சேதம் தொடர்பாகப் புதுச்சேரியில் மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.
புதுவை அருகே நிவர் புயல் கடந்த 26-ம் தேதி கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் புதுவையில் பலத்த சேதம் ஏற்பட்டது. நெற்பயிர்கள், வாழை, காய்கறித் தோட்டம் ஆகியவை மழைநீரில் மூழ்கி அழுகின. சாலைகள் முற்றிலுமாகச் சேதமடைந்தன. நிவர் புயலால் புதுவையில் 820 ஹெக்டேர் நெல், 200 ஹெக்டேர் காய்கறி, 170 ஹெக்டேர் கரும்பு, 7 ஹெக்டேர் வெற்றிலை, 55 ஹெக்டேர் வாழைத் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாகப் புதுவையில் ரூ.400 கோடி அளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனிடையே புரெவி புயலால் எதிர்பாராதவிதமாகப் புதுவையில் 5 நாட்களுக்கும் மேலாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பின. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கிக் கூடுதலாக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சேதத்தையும் கணக்கிட்டு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என நாராயணசாமி வேண்டுகோள் வைத்திருந்தார்.
இந்நிலையில் தமிழகம், புதுவையில் புயல் சேதத்தைப் பார்வையிட மத்திய அரசின் இணைச்செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான மத்தியக் குழுவினர் வந்துள்ளனர். இந்தக் குழுவில் மத்திய வேளாண்துறை இயக்குநர் மனோகரன், மீன்வளத்துறை ஆணையர் பால் பாண்டியன், சாலைப் போக்குவரத்துத்துறை மண்டல அலுவலர் ரணஞ்சய் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் இன்று பத்துக்கண்ணு கிராமத்தில் வயல்வெளியில் நெற்பயிர்கள் மூழ்கியிருப்பதைப் பார்வையிட்டனர். பின்னர் ராமநாதபுரம் கிராமத்தில் வாழை, நெல், கரும்பு ஆகியவை பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிட்டனர்.
அப்போது விவசாயிகள், நீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்களையும், சாய்ந்துபோன வாழைமரங்கள் உள்ளிட்டவற்றையும் காட்டினர். அங்கிருந்து மத்தியக் குழுவினர் சந்தைபுதுக்குப்பம் கிராமத்திற்குச் சென்றனர். அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்பு சேதம் குறித்துக் கணக்கிட்டனர். தொடர்ந்து முதலியார்பேட்டையில் சுதானா நகர் பகுதிக்கு வந்தனர். அங்கு குடியிருப்புப் பகுதிகளில் நகராட்சி சாலைகள் சேதமடைந்திருப்பதைப் பார்வையிட்டனர்.
பின்னர் மத்தியக் குழுவினர் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்றனர். அங்கு படகுகளின் சேதம், வலைகள் சேதம் குறித்துக் கணக்கிட்டனர். பின்னர் தலைமைச் செயலகத்திற்குத் திரும்பினர். மத்தியக் குழுவினருடன் வளர்ச்சித்துறை ஆணையர் அன்பரசு, ஆட்சியர் (பொறுப்பு) பூர்வாகார்க் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.
தலைமைச் செயலகம் திரும்பிய மத்தியக் குழுவினரிடம், சேதங்கள் குறித்த தகவல்களை அதிகாரிகள் துறைவாரியாக வீடியோ காட்சிகள் மூலம் விளக்கினர். முதல்வர் நாராயணசாமியும், அமைச்சர்களும் மத்தியக் குழுவினரைச் சந்தித்து புயல் சேதம் குறித்து விளக்கி நிவாரணத்தை உடனடியாக வழங்கும்படி கேட்டுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்தியக் குழுவினர் சந்தித்தனர்.
இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "முதல் கட்டமாக ரூ.100 கோடி கோரியுள்ளோம். புயல், மழையால் புதுச்சேரி அடிக்கடி பாதிக்கப்படுவதால் நிரந்தரத் தீர்வுத் திட்டமும், பேரிடர் நிதியும் ஒதுக்கக் கேட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.