

பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் அவதூறான பேச்சைக் கண்டித்து விருதுநகரில் அவரது உருவ பொம்மையை திமுகவினர் எரிக்க முயன்றனர். அப்போது அங்கு அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்ட அதிமுக செயலரும் பால்வளத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று அளித்த பேட்டியில் திமுக தலைவர் ஸ்டாலினையும் திமுகவினரையும் கடுமையாக விமர்சித்தார்.
அமைச்சரின் அவதூறான பேச்சைக் கண்டித்து விருதுநகர் தேசபந்து திடலில் இன்று காலை திமுகவினர் குவிந்தனர். எம்எல்ஏ சீனிவாசன் தலைமையிலான திமுகவினர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
தகவலறிந்த போலீஸார் சுற்றி வளைத்து உருவ பொம்மையைப் பறித்துச் சென்றனர். அப்பொழுது திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் உருவப்படங்களை திமுகவினர் தீயிட்டு எரித்தனர். இதையடுத்து திமுகவினர் 160 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்கும் தகவலறிந்து அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் விஜயகுமாரன், ஒன்றியச் செயலர்கள் தர்மலிங்கம், கண்ணன் மற்றும் அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பொழுது திமுக தலைவர் ஸ்டாலின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்றனர். போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர்.
திமுகவினரை கண்டித்து அதிமுகவினர் குவிந்ததால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதைப்போன்று ராஜபாளையத்தில் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை அதிமுகவினர் தீயிட்டு எரித்தனர்.
அப்பொழுது திமுகவினருக்கு அதிமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.