காயமடைந்தால் சிகிச்சை; இறந்துவிட்டால் அடக்கம் - செல்லப்பிராணிகளுக்கு நம்பிக்கை தரும் நண்பர்கள்

காயமடைந்தால் சிகிச்சை; இறந்துவிட்டால் அடக்கம் - செல்லப்பிராணிகளுக்கு நம்பிக்கை தரும் நண்பர்கள்
Updated on
2 min read

பரபரப்பான திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரேஸ்கோர்ஸ் சாலை யில் நேற்று முன்தினம் காலை, சாலையை கடக்க முயன்ற ஒரு நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த நாய், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

மனிதர்கள் அடிபட்டுக் கிடந்தாலே, வேடிக்கை பார்த்துச் செல்வோர் நிறைந்த உலகில், நாய்க்கு உதவவா நம்மவர்களுக்கு நேரம் இருக்கப் போகிறது?. ஒருவரும் நாய்க்கு உதவவில்லை. ஸ்டேடியத்தின் காவலாளி ஒருவர் ஓடி வந்து, யாருக்கோ போன் செய்து ஒரு நாய் அடிபட்டுக் கிடப்பதாக தகவல் கொடுத்தார். அடுத்த 10 நிமிடத்தில், 2 இளைஞர்கள் காரில் அங்கு வந்தனர். அதற்குள் நாய் இறந்துவிட்டது.

அதை உறுதி செய்த இளைஞர்கள், காரின் பின்பகுதியில் இருந்த மண்வெட்டியை எடுத்து சாலை யோரத்தில் குழிதோண்டி நாயின் உடலைப் புதைத்தனர். பின்னர் காவலாளிக்கு நன்றி சொல்லிவிட்டு, புறப்பட முயன்றனர். அவர்களை நிறுத்தி, ஏதேனும் பொதுநல அமைப் பைச் சேர்ந்தவர்களா என கேட்ட போது, அவர்கள் பொன்மலைப் பட்டியைச் சேர்ந்த சுரேஷ், மண்டையூரைச் சேர்ந்த மாணிக்கம் எனத் தெரியவந்தது.

தங்களின் சேவை குறித்து சுரேஷ் கூறியபோது, “இந்த பகுதியிலுள்ள அலுவலகங்கள், கடைகள், வங்கி ஏடிஎம், மைதானத்தில் என எல்லா வாட்ச்மேனிடமும் எங்க சாரோட செல்போன் நம்பர் இருக்கும். எங்கேயாவது நாய் அடிபட்டுட்டா, சாருக்கு தகவல் சொல்லுவாங்க.

உடனே நாங்க அங்க போய், நாயை மீட்டு சிகிச்சைக்கு எடுத்துப் போவோம். ஒருவேளை அதுக் குள்ள இறந்துட்டா, அந்த இடத்தி லேயே ஆழமா குழிதோண்டிப் புதைச்சுடுவோம். இதுக்காக எங்க கார்ல எப்பவுமே முதலுதவிக்கான மருந்துகளும், மண்வெட்டியும் இருக்கும்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய மாணிக்கம், “இந்த வருஷத்துல, சாலையோரத் துல இறந்து கிடந்த 30-க்கும் மேற் பட்ட நாய்களின் உடல்களை அடக் கம் செஞ்சிருக்கோம்” என்றார்.

இவர்கள் குறிப்பிடும் ‘சார்’ யாரென விசாரித்தபோது, அவர் திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கே.கே.நகரைச் சேர்ந்த கண்ணையன் எனத் தெரியவந்தது. அவரைச் சந்தித்துப் பேசியபோது தெரிவித்ததாவது:

நாய்க்கு ஒருமுறை உணவு கொடுத்தாலும், அதோட ஆயுள் முழுவதும் நம்மிடம் நன்றியுடன் இருக்கும். அதனால நாய்கள்மீது எனக்கு ரொம்ப பிரியம். கிட்டத்தட்ட 25 வருசமா நாய்களுக்கு தினமும் வேகவைச்ச கோழித்தலை, கோழிக்கால், பிஸ்கட் போடுவது வழக்கம். எங்கேயாவது போகிற வழியில் நாய் செத்துகிடக்கிறதைப் பார்த்தா உடனே, அதை அடக் கம் பண்ணிட்டுதான் அடுத்த வேலையைச் செய்வேன்.

என்னோட பென்ஷன் பணத்தை நாய்களுக்காகவே செலவு செய் றேன். என்னை மாதிரியே திருச்சி யில டாக்டர் பத்மாவதி, கல்கண் டார்கோட்டை ராமகிருஷ்ணன், கே.கே.நகர் சுரேந்தர், தெப்பக்குளம் பழைய பேப்பர் கடைக்காரர்னு நிறைய பேரு நாய்களுக்கு ஏராளமா உதவி செஞ்சுட்டு வர்றாங்க. எல்லா நண்பர்களும் ஒன்றாகச் சேர்ந்து இதற்காக ஒரு அமைப்பை உருவாக்கலாம் என இருக்கிறோம். நாய்களுக்கு சிகிச்சை தருவதில் மாநகராட்சி எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத் தால் பயனுள்ளதாக இருக்கும்” என்றார் கண்ணையன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in