

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுநகரில் இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ ஆகியோர் தலைமை வகித்தனர்.
விருதுநகர் எம்எல்ஏ சீனிவாசன், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசை கண்டித்தும், டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ பேசுகையில், எங்கே விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர் ஸ்டாலின்.
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் நிலத்தின் மீது விவசாயிக்கு உரிமை இல்லாமல் போகும். இதை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆகவும் தான் அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத மாநில அரசை நாம வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
முன்னதாக தங்கம் தென்னரசு எம்எல்ஏ பேசியபோது, மத்திய அரசை கண்டித்தும், புதிதாக கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினார்.