Published : 03 Dec 2020 05:29 PM
Last Updated : 03 Dec 2020 05:29 PM

மாற்று அரசியல் மலர ரஜினி ஒரு வேள்வியில் இறங்கியுள்ளார்; ராமருக்கு அணில்போல் நான் இருப்பேன்: தமிழருவி மணியன் பேச்சு

சென்னை

தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையிலும், மருத்துவர்கள் கொடுத்திருக்கிற எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு மக்கள் நலனுக்காக, மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என்பதற்காக ரஜினி இன்று ஒரு மிகப்பெரிய வேள்வியில் இறங்கியிருக்கிறார் என்று தமிழருவி மணியன் பேசினார்.

ரஜினி, போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தின் முன் கட்சி தொடங்குவது குறித்து அறிவித்தார். அதற்குப் பின், தமிழருவி மணியனைத் தனது பணிக்கான மேற்பார்வையாளராக நியமித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்பின்னர் தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் இன்று பேசியதாவது:

“செல்வமும், செல்வாக்கும், புகழும், பெருமையும் தேடித்தந்த தமிழக மக்களுக்கு தன்னால் இயன்ற வகையில் நன்றிக் கடன் ஆற்றவேண்டும் என்பதுதான் ரஜினியின் பெருவிருப்பமாக உள்ளது. அந்த விருப்பத்தின் அடிப்படையில்தான் இன்று அரசியல் கட்சி குறித்து அவர் அறிவித்துள்ளார்.

வெறுப்பு அரசியல் வேரோடிக் கிடக்கின்ற இன்றைய தமிழகத்தில், அன்பு சார்ந்து, அன்பை ஆதர்சமாகக் கொண்டு, சாதி மதப் பேதமற்று, அனைவரையும் அன்பினால் ஆரத் தழுவுகின்ற ஆன்மிக அரசியலை அவர் இன்றைக்கு அரங்கேற்றுகிறார். இது தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ஒரு புதிய திசையைக் காட்டக்கூடியதாக இந்த ஆன்மிக அரசியல் அமையும்.

தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையிலும், மருத்துவர்கள் கொடுத்திருக்கிற எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு மக்கள் நலனுக்காக, மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என்பதற்காக ரஜினி இன்று ஒரு மிகப்பெரிய வேள்வியில் இறங்கியிருக்கிறார். ஒட்டுமொத்தத் தமிழக மக்களும் ஒரு மாற்று அரசியலை, ஊழலற்ற வெளிப்படைத் தன்மைமிக்க மிகச்சிறந்த நிர்வாகத்தைச் சந்திக்க வேண்டும் என்றால் அதைத் தருவதற்கு ரஜினி மட்டுமே இருக்கிறார்.

உயிருக்கும் மேலாக அவரைப் போற்றி மகிழக்கூடிய ரசிகப் பெருமக்களுக்கும், ஊழலற்ற, நேரிய ஆட்சியைத் தர இவர் ஒருவரால் மட்டுமே முடியும் என்று நம்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற லட்சக்கணக்கான வாக்காளப் பெருமக்களுக்கும் இன்றுதான் உண்மையான தீபாவளித் திருநாள். எனவே, மாற்றம் நோக்கி ரஜினி புறப்பட்டுவிட்டார். மக்கள் நிச்சயம் அவர் கனவை நனவாக்குவார்கள்.

ராமருக்கு அணில் உதவியதுபோல், ரஜினியின் இந்த அற்புதமான வேள்வியில் என்னை முற்றாக ஈடுபடுத்திக் கொண்டு என்னால் ஆன அனைத்தையும் செய்வேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x