

புரெவி புயலால் சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதல்வர் பழனிசாமியின் வருகை தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புரெவி புயலால் டிச.2 முதல் டிச.4-ம் தேதி வரை சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஏற்கெனவே நிவர் புயலால் சிவகங்கை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. சில இடங்களில் கண்மாய்களில் உடைப்பும் ஏற்பட்டன. அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன.
நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்ததால் வடமாவட்டங்களில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், புரெவி புயல் கன்னியாகுமரி, பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது. இதனால் சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டப் பகுதிகள்தான் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தென்மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதே சமயத்தில் முதல்வர் டிச.4-ம் தேதி சிவகங்கைக்கு வர உள்ளார். இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய வருவாய், உள்ளாட்சி, பொதுப்பணி மற்றும் காவல்துறை அதிகாரிகள் முதல்வர் வருகைக்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும், மழை தொடர்ந்து பெய்து வருவதால் அவர்களால் அந்தப் பணியையும் முறையாகச் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் முதல்வர் பழனிசாமியின் வருகை தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.