

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டிச.11-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு அங்கேயே தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளது என, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
திருச்சியில் அந்த அமைப்பின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று (டிச. 02) நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"டெல்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு ஏற்கலாம் அல்லது ஏற்க மறுக்கலாம். ஆனால், அந்தப் போராட்டம் குறித்தோ, அவர்களது கோரிக்கை குறித்தோ ஒரு வார்த்தைகூட வெளிப்படையாக ஊடகத்திலோ அல்லது விவசாயிகளிடத்திலோ இதுவரை பேசாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. டெல்லியில் போராடும் விவசாயிகளின் உயிருக்கும், உடைமைகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் பிரதமர் மோடிதான் பொறுப்பு.
விவசாயிகளின் போராட்டத்துக்கு கனடா நாட்டின் பிரதமர் தார்மீக ஆதரவு கொடுத்திருக்கிறார். ஆனால், பிரதமர் மோடியோ விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இது மனிதநேயமற்ற செயல்.
இந்தச் சட்டத்தால் விளைநிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விவசாயமும், இயற்கை வளங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் புதிய வேளாண் சட்டத்தை அதிமுக ஆதரித்தது தமிழர்களுக்குச் செய்த துரோகம். எனவே, புதிய வேளாண் சட்டத்துக்கு அளித்த ஆதரவை அதிமுக திரும்பப் பெற வேண்டும். இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும். இல்லையெனில், முதல்வரை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டிச.11-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் பங்கேற்க வேண்டும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், "வட மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகள், புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறி வரும் நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் உத்தரவாதம் கொடுத்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்த உண்மைநிலையை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசரமாக முறையீடு செய்ய வேண்டும். மேகேதாட்டு அணை கட்டுமானப் பணியை நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணையைக் கட்ட கேரள அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணைபோகக் கூடாது. அணை கட்ட கேரள அரசால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும். அணையில் 152 அடிக்குக் கொள்ளளவை உயர்த்த உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இந்த உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.