புதுச்சேரியில் தரம்வாய்ந்த இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை: முதல்வர் நாராயணசாமி தகவல்

இஎஸ்ஐ மருத்துவக் கூடம் திறப்பு விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
இஎஸ்ஐ மருத்துவக் கூடம் திறப்பு விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
Updated on
2 min read

புதுச்சேரியில் தரம்வாய்ந்த இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் ஏம்பலம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவக் கூடம் திறப்பு விழா இன்று (டிச.2) நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார். தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு இஎஸ்ஐ மருத்துவக் கூடத்தைத் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், "மக்கள் இருக்கின்ற இடத்துக்கே சென்று கரோனா பரிசோதனை செய்கின்ற மாநிலமாக புதுச்சேரி இருக்கின்றது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

உலகத்தையே ஆட்டிப்படைக்கின்ற கரோனா தொற்று நேரத்தில் நம்முடைய மாநிலத்தில் உயிர்ச்சேதம் அதிகம் இல்லாமல் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகளைச் செய்துள்ளோம். குணமடைந்தவர்களின் சதவீதமும் அதிகரித்துள்ளது.

இதனைச் சொல்லக் காரணம் மத்தியில் இருந்து கிடைக்க வேண்டிய நிதி வரவில்லை. நம்முடைய மாநில அரசின் நிதியை வைத்து, அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். ஆனால், கரோனா புதுச்சேரியை விட்டுச் சென்றுவிட்டது. இனிமேல் வராது என்ற எண்ணம் வேண்டாம். இரண்டாவது முறை வருகின்ற வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, விழிப்புடன் இருக்க வேண்டும்.

மருந்து கண்டுபிடிக்கும் வரை பொதுமக்கள் எல்லோரும் முகக்கவசம் அணிந்துகொண்டுதான் வெளியே செல்ல வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் யாருக்குத் தொற்று இருக்கிறது என்று தெரியாது. ஒருவர் 10 பேருக்குத் தொற்றை பரப்பிவிட்டுச் சென்றுவிடுவார். கரோனா வந்து நுரையீரல் பாதிக்கப்பட்டால் உயிர் பிழைப்பது மிகவும் கடினம். எனவே, விதிமுறைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

புதுச்சேரியில் தரம் வாய்ந்த இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கிறோம். புதுச்சேரிக்குப் பல விருதுகளைப் பெற்றுள்ளோம். குறிப்பாக, வெளிப்புற சிகிச்சையில் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலம் என்று மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசே நமக்கு விருது கொடுத்துள்ளது. இந்த மாதம் கூட மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகின்ற மாநிலம் என்று புதுச்சேரிக்கு விருது கிடைத்துள்ளது.

கடந்த காலங்களில் விருதையே புதுச்சேரி மாநிலம் பார்த்தது கிடையாது. ஆனால், எங்களுடைய ஆட்சியில் கல்வி, மருத்துவம், சமூக நலம், சட்டம்-ஒழுங்கு, சுற்றுலா எனப் பல துறைகளில் விருதுகளைப் பெற்றுள்ளோம். நானும், அமைச்சர்களும், எம்.பி.க்களும் மக்களுக்காக உழைத்ததுதான் இதற்கு முக்கியக் காரணம். நகரப்பகுதி மட்டுமல்லாமல் கிராமப்புறப் பகுதியில் தற்போது இஎஸ்ஐ மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொழிலாளர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இவ்விழாவில் தொழிலாளர் துறை செயலாளர் வல்லவன், இஎஸ்ஐ மண்டல இயக்குநர் கிருஷ்ணகுமார், துணை இயக்குநர் ஷமிமுனிசா பேகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in