

டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் டெல்லியில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இருப்பினும் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் மீது தடியடிப் போராட்டம் நடத்தியதற்குக் கண்டனம் தெரிவித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினைச் சார்ந்த விவசாயிகள், அதன் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு, கைகளில் காய்கறிகளை வைத்துக்கொண்டு இன்று (நவ.30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி கூறும்போது, "வேளாண் சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், கண்டனம் தெரிவித்தும் நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு வகையில் போராடி வருகின்றனர்.
விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதனால் வேளாண்மை நிலங்கள், வேளாண் உற்பத்தி முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் சென்று விடும். இதனைக் கண்டித்து தலைநகர் டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினால் எரிமலை வெடிக்கும் அளவுக்குப் போராட்டங்கள் நடைபெறும். விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்" என்றார்.