

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த வழக்குக்கான குற்றப்பத்திரிகையில் இருவரின் பெயர்களை நீக்க, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை செக்கானூரணி காவல் ஆய்வாளர் அனிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள பொன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. இவருக்கும், அருகிலுள்ள நல்லதம்பி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 2017 செப்டம்பரில் இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முத்துவும், அவரது மனைவியும் தாக்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின்பேரில் செக்கானூரணி போலீஸார் நல்லதம்பி உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எஸ்.ஐ. ஒருவர் கிடப்பில் போட்டுள்ளார். வழக்கு தொடர்பாக சமீபத்தில் குற்றப்பத்திரிகை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை அறிந்த நல்லதம்பி, அடிதடி சம்பவத்திற்கு சம்பந்தமில்லாத தனது மகன்கள் மாரி, கமலக்கண்ணன் ஆகியோரின் பெயர்களை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கக்கோரி தற்போதைய செக்கானூரணி காவல் ஆய்வாளர் அனிதாவை அணுகினார்.
இருப்பினும், மூவரின் பெயர்களை நீக்க, காவல் ஆய்வாளர் ரூ. 1 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதற்கு நல்லதம்பி ரூ. 80 ஆயிரம் தருவதாக சம்மதம் தெரிவித்து, முதல் கட்டமாக ரூ. 30 ஆயிரம் தருகிறேன், பெயர்களை நீக்கியபிறகு எஞ்சிய தொகையை கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையில் லஞ்சப்பணம் கொடுக்க விரும்பாத நல்லதம்பி மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். போலீஸாரின் யோசனைப்படி, ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளுடன் நேற்று இரவு (நவ. 26) செக்கானூரணி காவல் நிலையத்திற்கு நல்லதம்பி சென்றார்.
பணியில் இருந்த ஆய்வாளர் அனிதாவிடம் ரூ. 30 ஆயிரத்தைக் கொடுத்தபோது, வெளியில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யசீலன் தலைமையிலான ஆய்வாளர்கள் ரமேஷ்பிரபு, குமரகுரு, கண்ணன், சூரியகலா அடங்கிய குழுவினர் கையும், களவுமாக பிடித்தனர்.
நல்லதம்பியிடம் இருந்து வாங்கிய லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் காவல் ஆய்வாளர் அனிதா, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, லஞ்சம் வாங்கி கைதான காவல் ஆய்வாளர் அனிதாவை தற்காலிக பணி நீக்கம் செய்ய, மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். லஞ்சம் வாங்கி பெண் ஆய்வாளர் கைதான சம்பவம் மதுரை போலீஸார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட அனிதா, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது கணவர் செங்கல் சூளை நடத்துகிறார். 2004-ல் எஸ்.ஐ-யாக பணியில் சேர்ந்து, 2014-ல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.