

'கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும். அவர் இங்கு போட்டியிட்டால் அது தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணிக்குப் புதிய எழுச்சியைக் கொடுக்கும்'- காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் நேற்று ட்விட்டரில் இப்படியொரு செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்.
இதற்கு முன்பு ஹாத்ரஸில் பட்டியலினப் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து உ.பி.யில் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியாக, ‘உத்தரப்பிரதேச முதல்வர் வேட்பாளராகப் பிரியங்கா காந்தியை அறிவித்து, இப்போதே காங்கிரஸ் கட்சி தேர்தல் வேலைகளைத் தொடங்க வேண்டும்’ என்று ட்வீட் செய்திருந்தார் கார்த்தி. இப்படி அவர் சமீப காலமாகப் பிரியங்கா காந்திக்கு ஆதரவாகச் சிவப்புக் கம்பளம் விரிப்பதன் பின்னணியில் வேறு அரசியல் கணக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள் கார்த்தியை விமர்சிக்கும் காங்கிரஸ்காரர்கள்.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பேசிய அவர்கள், ''2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது என்றதும், போட்டியிடாமல் ஒதுங்கினார். ஆளும் கட்சியின் நிதியமைச்சரே தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியது அப்போது அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. சிதம்பரத்தின் இந்த முடிவு தேசிய அளவில் காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அதேநேரம் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றாலும் தனது சிவகங்கை தொகுதியில் தனது விசுவாசி ஒருவரை நிறுத்த நினைத்தார் சிதம்பரம். ஆனால், அப்போது அதை ஏற்க மறுத்த ராகுல் காந்தி, ''சிதம்பரம் போட்டியிடாவிட்டால் அவரது தொகுதியில் யாரை நிறுத்த வேண்டும் என்று நாமே முடிவு செய்வோம்'' என்று சொன்னதாக அப்போது செய்தி பரவியது. கட்சி அப்படியொரு முடிவெடுத்தால் சிவகங்கை தொகுதி தனது கையைவிட்டுப் போய்விடும் எனப் பதறிய சிதம்பரம், பெரும் போராட்டத்திற்குப் பிறகு தனது மகன் கார்த்திக்காகச் சிவகங்கை தொகுதியைக் கேட்டு வாங்கினார். இருப்பினும் கார்த்தியால் அந்தத் தேர்தலில் ஜெயிக்க முடியவில்லை.
இந்த நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சித் தலைமை தனக்குத்தான் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பளிக்கும் என நினைத்துக் கொண்டிருந்தார் கார்த்தி. ஆனால், கார்த்தியைத் தவிர்த்து வேறொரு வேட்பாளரைத் தேடினார் ராகுல். இதனால் சிவகங்கைக்கு மட்டும் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதமானது. இதையடுத்து டெல்லியில் முகாமிட்டுப் போராடி மீண்டும் மகனுக்குச் சிவகங்கையை வாங்கினார் சிதம்பரம்.
ஏற்கெனவே தமாகா, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை கட்சிகளில் இருந்துவிட்டு மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பியவர் சிதம்பரம். அப்போது சோனியாவிடம் பேசி சிதம்பரத்துக்கு முன்பு போல் முக்கியத்துவம் அளிக்க வைத்தவர் சோனியாவின் அரசியல் ஆலோசகராக இருந்த அகமது படேல். கட்சிக்குள் சிதம்பரத்துக்கு நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் எல்லாம் அவருக்கு ஆதரவாக நின்றவர் படேல். இப்போது அவரது மறைவு சிதம்பரத்துக்கும் கார்த்திக்கும் பெரிய இழப்புதான்.
இந்த நிலையில், அண்மைக் காலமாகத் தலைமைக்கு புத்தி சொல்லும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இதில் கபில் சிபல் உள்ளிட்டவர்களின் ட்விட்டர் பதிவுகளை ரீ-ட்வீட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் கார்த்தி. இரண்டு தேர்தல்களில் தனக்கு வாய்ப்பளிக்க யோசித்த ராகுல் காந்தி, எதிர்காலத்தில் தனக்கு எத்தகைய முக்கியத்துவத்தைக் கொடுப்பாரோ என்ற கவலை கார்த்திக்கு இருக்கலாம். அதனால்தான் பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தத் தொடங்கி இருக்கிறார்'' என்றார்கள்.