

நவ. 28-ம் தேதி தமாகாவின் 7-ம் ஆண்டு தொடக்க விழாவை கரோனா தொற்றின் காரணமாக, அவரவர் மாவட்டத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கியும், கரோனா முன்னெச்சரிக்கை பற்றிய பிரசுரங்கள் வழங்கியும் கொண்டாட வேண்டும் என, அக்கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (நவ. 24) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கிய நாள் நவம்பர் 28 ஆம் தேதி வருடா வருடம் இந்த நாளில் மாநிலத்தில் ஒர் இடத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்து இந்நிகழ்ச்சியை கடந்த 6 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறோம்.
ஆனால், இந்த வருடம் கரோனா என்ற கொடிய நோய் கடந்த 7 மாதங்களாக மக்களை முடக்கிப்போட்டு, பல உயிர்களை பலிவாங்கி இருக்கிறது. தற்போது, கரோனா தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில், அதிகமாக கூட்டம் கூடினால் கரோனாவின் தாக்கத்தால் மீண்டும் நோய்தொற்று பரவ அதிகம் வாய்ப்பிருக்கிறது.
எனவே, தமிழ் மாநில காங்கிரஸ் உதயமான நவம்பர் 28-ம் தேதி; சனிக்கிழமை அன்று, அரசு விதித்து இருக்கின்ற சட்டத்திட்டங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் உட்பட்டு, மாவட்டத் தலைவர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியை தேர்ந்தெடுத்து, வழக்கம் போல் அவரவர் மாவட்டங்களில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றம் தொண்டர்கள் 100 பேருக்கு மிகாமல் அழைத்து, நமது இயக்கக் கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டுகிறேன்.
அதோடு, கரோனா தொற்று மழைக் காலங்களில் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாலும், இரண்டாம் தொற்றுப் பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் குழு அறிவுறுத்தியிருப்பதாலும், இந்நிகழ்ச்சியில் கரோனா பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும், முன்னெச்சரிக்கையுடன் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
காமராஜர், மூப்பனாரின் குறிக்கோளான நேர்மை, எளிமை, தூய்மையை கொள்கையாக கொண்டு செயல்படும் தமாகாவின் வெற்றிப் பயணத்தில் தங்களது அனைவரது பணியும் முழுமையாக அமைந்து வென்று முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வருங்காலத்தில் வளமான தமிழகத்தையும் வலிமையான பாரதத்தையும் அமைக்க தொடர்ந்து பாடுபடுவோம், பெற்றிபெறுவோம்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.