யானைக்கவுனியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; ஆக்ராவில் கைதான பெண் உட்பட 3 பேர் சென்னை அழைத்து வரப்பட்டனர்: தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை

யானைக்கவுனியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; ஆக்ராவில் கைதான பெண் உட்பட 3 பேர் சென்னை அழைத்து வரப்பட்டனர்: தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை
Updated on
1 min read

யானைக்கவுனியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆக்ராவில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட 3 பேர் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டனர்.

சென்னை சவுகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெரு பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் பைனான்ஸ் அதிபர் தலில் சந்த், மனைவி புஷ்பா பாய், இவர்களது மகன் சித்தல் குமார். ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் கடந்த 11-ம் தேதி வீட்டு படுக்கை அறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தனர். இதுதொடர்பாக யானைக்கவுனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இறந்து போன சித்தல் குமாரின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், அவரது கூட்டாளிகள் கொல்கத்தாவைச் சேர்ந்த ரவீந்தரநாத், விஜய் உத்தம் கமல் ஆகிய 3 பேரை மகாராஷ்டிரா மாநிலம் புனே சென்று கைது செய்தனர்.

கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரர் விலாஷ், கூட்டாளி ராஜூ சிண்டே ஆகியோர் ஆக்ராவில் கடந்த 19-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் தனிப்படை போலீஸாரின் செல்போன் எண்களை தெரிந்து வைத்துக் கொண்டு, அவர்களின் நகர்வை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே தப்பி வந்துள்ளனர். இருப்பினும், சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் சென்னை தனிப்படை போலீஸார் ஜெயமாலா தப்பிக்க உதவிய அவரது நண்பரின் செல்போன் சிக்னலை அடிப்படையாக வைத்து 3 பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று முன்தினம் ஆக்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நேற்று காலையில் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

3 பேரிடமும் தனிப்படை போலீஸார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஜெயமாலாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in