

சபரிமலை யாத்திரை செல்லமுடியாதவர்கள் ஐயப்பனுக்கு இருமுடி காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மதுரை கள்ளந்திரியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகச் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கரோனா பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடு விதிகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 24 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை அறிக்கையும் பக்தர்களுக்குக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரிசோதனை அறிக்கை இல்லாதவர்களுக்கு நிலக்கல் பகுதியில் உடனுக்குடன் கரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டு அதன் முடிவுகளைப் பொறுத்து, தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அத்துடன், சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுகிறார்கள். தினமும் ஆயிரம் பேர் வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதால் ஆன்லைனில் காத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலையில், ஜனவரி 20-ம் தேதி வரை தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளால் வழக்கமாக சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இந்த ஆண்டு சபரிமலை சென்று ஐயப்பனைத் தரிசிக்க முடியுமா என்ற தவிப்பில் உள்ளனர். இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, சபரி யாத்திரை செல்லமுடியாத பக்தர்கள் மதுரை கள்ளந்திரியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இருமுடி காணிக்கை செலுத்தவும் நெய் அபிஷேகம் செய்யவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தமிழ் மாநிலக் கிளை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து தமிழ் திசை இணையதளத்திடம் பேசிய அச்சங்கத்தின் தமிழ் மாநிலத் தலைவர் மு.விஸ்வநாதன், “மகர விளக்கு காலத்தில் வழக்கம்போல சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தமிழ் மாநிலக் கிளையின் சார்பில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 600 பேருக்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் 1,000 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
வழக்கம் போல சபரிமலையில் பக்தர்கள் நடந்து செல்லும் வழி நெடுகிலும் ஸ்ட்ரெச்சர் சேவைகளும் புண்ணிய பூங்காவனம் சேவையும் ஐயப்ப சேவா சங்கத்தால் வழங்கப்படுகிறது. சரல்மேடு, மரக்கூடம், நடைப்பந்தல் மற்றும் சன்னிதானம் பகுதிகளில் ஸ்ட்ரெச்சர் சேவை அளிப்பதற்காகச் சங்கத்தின் தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் தயாராய் இருப்பார்கள்.
பக்தர்கள் மலை ஏறும்போது யாருக்காவது மூச்சுத் திணறல் அல்லது மாரடைப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி அளிக்கவும், ஆக்சிஜன் வழங்கவும் ஐந்து இடங்களில் ஆக்சிஜன் பார்லர்கள் செயல்படுகின்றன. பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்ட ஆட்சியர்களின் வேண்டுகோளை ஏற்று சபரிமலை சானிடைசன் சொஸைட்டி வேண்டுகோளின்படி எரிமேலி, நிலக்கல், பம்பா, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள தமிழ் மாநில ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் 260 தன்னார்வலர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக இத்தனை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கம் போலத் திரளான பக்தர்கள் சபரி யாத்திரை மேற்கொள்ள முடியாத சூழல் இருக்கிறது. இதனால் பலர் தத்தம் பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களில் இருமுடி காணிக்கை செலுத்தும் யோசனையில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், சபரிமலைக்கு இருமுடி காணிக்கை செலுத்த முடியாத ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக மதுரை அழகர்கோயில் அருகே கள்ளந்திரியில் சாஸ்தா முதியோர் இல்ல வளாகத்தில் செயல்படும் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இருமுடி காணிக்கை செலுத்தவும் அங்கே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.