

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு அரசு, உரிய நிவாரணமும் அரசு வேலையும் அளிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (நவ. 21) வெளியிட்ட அறிக்கை:
"தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த ராணுவ வீரர் கருப்புசாமி லடாக் பகுதியில் நடந்த விபத்தில் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
இந்திய நாட்டுக்காக பாதுகாப்புப் பணியில் கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்த கருப்புசாமி தன் இளம் வயதில் விபத்தில் காலமானது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ராணுவ வீரர் கருப்புசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணமும் அவரது குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தமாகா சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.