

புதுச்சேரியில் இன்று புதிதாக 69 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (நவ. 19) கூறுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் 3,620 பேருக்குப் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 32 பேருக்கும், காரைக்காலில் 11 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும், மாஹேவில் 24 பேருக்கும் என மொத்தம் 69 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 609 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.67 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் மருத்துவமனைகளில் 249 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 421 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 670 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 102 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 254 (96.50 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 307 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 3 லட்சத்து 29 ஆயிரத்து 504 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக 100க்கும் கீழ் தொற்று பாதிப்பு உள்ளது. நமது சுகாதாரத்துறை கடந்த 7 மாதங்களாக பொதுமக்களுக்காகப் பணியாற்றி வருகிறது. பொதுமக்கள் மத்தியில் இருந்து ஒத்துழைப்பு இருந்தால் இன்னும் தொற்றைக் குறைக்க முடியும்.
ஆகவே, நூறு சதவீதம் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது ஆகியவற்றைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதனைக் கடைப்பிடித்தால் புதுச்சேரியில் கரோனா கட்டுப்பாட்டில் வரும்" எனத் தெரிவித்தார்.