

சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ளமருமகளை பிடிக்க பிற மாநிலபோலீஸாரின் உதவியை சென்னைபோலீஸார் நாடியுள்ளனர்.
சென்னை சவுகார்பேட்டை, விநாயக மேஸ்திரி தெரு பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்துவந்தவர் பைனான்ஸ் அதிபர் தலில் சந்த் (74). இவரது மனைவி புஷ்பா பாய் (68). மகன் சித்தல் குமார் (40). ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர்கள் கடந்த 11-ம்தேதி வீட்டு படுக்கை அறையில்துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தனர்.
இதுதொடர்பாக யானைகவுனி போலீஸார் வழக்குப் பதிந்து இறந்துபோன சித்தல் குமாரின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர் புனேவைச் சேர்ந்த கைலாஷ் (32), அவரது கூட்டாளிகளான கொல்கத்தாவைச் சேர்ந்த ரவீந்தரநாத் (25), விஜய் உத்தம் கமல் (28) ஆகிய 3 பேரை புனேவில் வைத்து கைது செய்தனர். கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் ஜெயமாலா உட்பட மேலும் சிலர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க ஆய்வாளர் ஜவஹர் தலைமையிலான தனிப்படை போலீஸார் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.
தற்போது, ஜெயமாலா வேறு மாநிலத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் தனிப்படை போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநில போலீஸாரின் உதவியையும் சென்னை போலீஸார் நாடியுள்ளனர். அவரையும் கொலைக்கு ஏவப்பட்ட அவரது கூட்டாளிகளையும் விரைவில் கைது செய்வோம் என போலீஸ் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எந்தமாநிலத்தில் இருந்து, யாரிடமிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சூடுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 3 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தினால் துப்பாக்கி வாங்கப்பட்டதன் முழு பின்னணியும் வெளிவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எந்த மாநிலத்தில் இருந்து, யாரிடமிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.