

மதுரை மாவட்டம், பேரையூர் அருகிலுள்ள சூலப்புரத்தில் கோயில் திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்குள்நீண்ட நாட்களாக பிரச்சினை உள்ளது.
அதிகாரிகளின் சமரசத்துக்கு பின்பு இவ்வாண்டு திருவிழா அக்.,13ல் திருவிழா நடந்தது. திருவிழாவின்போது, இரவில் விவசாயி செல்லத்துரை திடீரென உயிரிழந்தார்.
மற்றொரு சமூகத்தினரால் அவர் கொல்லப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில் உலைப்பட்டியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் வருவாய் ஆய்வாளர் உட்பட 12 பேர் மீது டி.ராமநாதபுரம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, மூவரை கைது செய்தனர்.
இதற்கிடையில் செல்லத்துரை விபத்தில் உயிரிழந்தபோதிலும், அவரைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டி 12 பேர் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விபத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் 4 மாணவர்களை விசாரணை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்துவதாகவும், உண்மையை அறிய வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரியும் அரசியல் அதிகாரம் அமைப்பினர் மற்றும் உலைப்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் போலீஸாரால் பாதிக்கப்பட்டதாக கூறி, உலைப் பட்டியைச் சேர்ந்த 4 பள்ளி மாணவர்கள், அரசியல் அதிகார அமைப்பு நிர்வாகிகள் பழனியப்பன் உள்ளிட்டோர் இன்று மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனித்தனியே மனு கொடுத் தனர்.
அதில் ஒருவர் கூறியிருப்பதாவது: அக்., 21-ல் எழுமலை காவல் நிலைய ஆய்வாளரின் ஓட்டுநர் எனது தந்தைக்கு போன் செய்து, ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு என்னை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
காவல் ஆய்வாளரிடம் அக்., 13ம் தேதி இரவில் நானும், நண்பரும் சந்தனமாரியம்மன் கோயில் அருகில் உட்கார்ந்து, செல்போனில் கிரிக்கெட் செய்தி பார்த்துக் கொண்டிருந்தபோது, ஆட்டோ ஒன்று மோதிய சத்தம் கேட்டது அதை நாங்களும் பார்த்தபோது, எங்களது அருகில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், சூலப்புரம் மக்கள் திரண்டுள்ளனர்.
அங்கு ஒருவர் மயங்கிக் கிடக்கிறார். உங்கள் ஊர்காரர்களை சந்தேகிக்கின்றனர், நீங்கள் யாரும் இங்கே இருக்காதீர்கள் என, கூறியதால் நானும், என்னுடைய நண்பரும் அங்கிருந்து சென்றுவிட்டோம் என, நடந்த விவரங்களை ஆய்வாளரிடம் தெரிவித்தேன்.
ஆனாலும், அவர் என்னை சரியாக விசாரிக்காமல் 23-ம் தேதி வரை காவல் நிலையத்தில் காக்க வைத்திருந்தார். 25-ம் தேதி சாதாரண உடையில் வந்த மூன்று காவலர்கள் என்னிடம் தனியாக விசாரித்தபோது, எனது விரல்களை பேனாவில் வைத்து அழுத்தி துன்புறுத்தினர்.
அப்போது, ஆட்டோவை பார்த்ததாக யாரிடமும் சொல்லக்கூடாது என, மிரட்டினர். அதில் ஒருவர் தனது வேட்டியால் எனது கண் களை கட்டினார். மற்றொருவர் முடியை பிடித்து இழுத்து பலமாக திருக்கினார். ஒரே நேரத்தில் மூவரும் சித்ரவதை செய் தனர். அன்றிரவு சுமார் 11 மணிக்கு மேல் என்னுடைய தந்தையிடம் எழுதி வாங்கிவிட்டு வீட்டுக்கு அனுப்பினர்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அதிகார அமைப்பு மாநில செயலர் பழனிசாமி கூறுகையில், ‘‘ சூலப்புரத்தில் செல்லத்துரை கொல்லப்படவில்லை. கோயில் பிரச்சினையை வைத்து, மற்றொரு சமூகத்தைப் பழிவாங்க 12 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சூலப்புரம் கோயிலுக்கு வரமாட்டோம் என, எழுதிக்கொடுத்தால் வழக்கை வாபஸ் பெறுவதாக செல்லத்துரை தரப்பினர் கூறுவதால் விபத்தை கொலை என, சித்தரிக்கின்றனர்.
விபத்தை நேரில் பார்த்த மாணவர்களை போலீஸார் துன்புறுத்தி மிரட்டியுள்ளனர். இதிலுள்ள உணமையை அறிய சிபிசிஐடி விசாரணை தேவை. மாணவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்,’’ என்றார்.