

திமுகவில் மீண்டும் தன்னைச் சேர்த்துக்கொள்ள மு.க.அழகிரி மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் பலனளிக்காததால், சட்டப்பேரவைத் தேர்தலில் என்ன மாதிரியான முடிவெடுப்பது என்பது குறித்து நவம்பர் 20-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.
திமுகவில் சேர்க்காவிட்டால் அக்கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் போட்டி வேட்பாளர்களை நிறுத்துவது அல்லது தனிக்கட்சி தொடங்கி அக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்பாய்லராக மாறுவோம் என்று அவர்கள் கூறியிருப்பது சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தனது ஆதரவாளர்களுக்கு ஆதரவாக ஊடகங்களிடம் கடுமையான கருத்துகளைச் சொன்னார் அழகிரி. இதற்காகக் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் அழகிரி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியின் படுக்கை அறைக்குள்ளேயே நுழைந்து, கடுமையாகப் பேசியதால் 2014, மார்ச் 24-ம் தேதி கட்சியில் இருந்தே நிரந்தரமாக நீக்கப்பட்டார் அழகிரி. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று தனக்கென ஆதரவாளர்களைத் திரட்டிக் கூட்டம் நடத்திய அவர், ஒரு கட்டத்தில் ஓய்ந்துபோனார்.
பிறகு கட்சியை விமர்சிப்பதையும், ஊடகங்களுக்குப் பேட்டி தருவதையும் நிறுத்திக்கொண்ட அழகிரி திமுகவில் மீண்டும் சேர்வதற்காகப் பொதுச் செயலாளர் அன்பழகன் வாயிலாக முயற்சி மேற்கொண்டார். ஆனால், அன்பழகனின் மறைவால் அந்த முயற்சியும் தடைப்பட்டுப்போனது. இருப்பினும் புதிய பொதுச் செயலாளர் துரைமுருகனை அணுக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவும் பலனளிக்கவில்லை. நேரடியாக மு.க.ஸ்டாலினுடன் பேச அழகிரியின் ஈகோ அனுமதிக்கவில்லை.
அழகிரி திமுகவில் இல்லாமலேயே தலா ஒரு சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களை திமுக சந்தித்துவிட்டது. இந்நிலையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் அதற்குள்ளாகத் திமுகவில் மீண்டும் சேர்ந்துவிட வேண்டும் என்று அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் முயல்கிறார்கள். ஆனால், இதுவரையில் அவர்களுக்குச் சாதகமான கருத்து கட்சித் தலைமையிடம் இருந்து வரவில்லை. இந்த அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில், மு.க.அழகிரி தன்னுடைய ஆதரவாளர்களுடன் நவம்பர் 20-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.அழகிரியின் ஆதரவாளரும், மதுரை மாநகர திமுக முன்னாள் அவைத் தலைவருமான இசக்கிமுத்துவிடம் கேட்டபோது, "திமுகவில் இருந்து அழகிரி உள்பட 20 பேரை நீக்கி 6 வருடமாகிவிட்டது. இந்த 6 ஆண்டு காலமாக அமைதியாகத்தான் இருக்கிறோம். அழகிரியே எனக்குக் கட்சியில் எந்தப் பதவியும் வேண்டாம். ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறேன் என்று பகிரங்கமாக அறிவித்த பின்னரும், அவரைக் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் எண்ணம் இன்றைய தலைமைக்கு இல்லை.
மு.க.அழகிரி மதுரையில் தீவிர அரசியலில் இருந்தபோது, மதுரை மாநகராட்சியைத் தொடர்ந்து மூன்று முறை வென்றது திமுக. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்துவிட்டது என்றாலும், அப்போது திமுகவுக்கு வெறும் 98 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே இருந்ததால், மைனாரிட்டி திமுக அரசு என்று தொடர்ந்து விமர்சித்தார் ஜெயலலிதா. அந்த அவப்பெயரைப் போக்குவதற்காக இடைத்தேர்தல்களில் கவனம் செலுத்தி, தென்மாவட்டங்களில் மட்டும் 8 தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி பெற்றுத் தந்து, கட்சியின் பலத்தை 106 ஆக உயர்த்தியவர் அழகிரி.
திமுகவில் ஒற்றுமை இல்லாததால் 2 முறை ஆட்சி வாய்ப்பை இழந்துவிட்டோம். மூன்றாவது முறையும் அந்த வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்றுதான் திமுகவில் சேர விரும்புகிறோம். எங்கள் விருப்பத்தை திமுக ஏற்காவிட்டால் என்ன செய்வது என்று ஆலோசிப்பதற்குத்தான் 20-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதில் நாங்கள் பங்கேற்று எங்களது கருத்தைத் தெரிவிப்போம்" என்றார்.
"நவம்பர் 21-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளே அழகிரி ஆதரவாளர்களின் கூட்டம் நடைபெறுவதில் ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா?" என்று அவரிடம் கேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
இதுகுறித்து மதுரையின் முன்னாள் துணை மேயரும், தீவிர அழகிரி ஆதரவாளருமான பி.எம்.மன்னனிடம் கேட்டபோது, "கலைஞரின் மகன் திமுகவுக்கு எதிராகப் போவாரா? அதேநேரத்தில் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்று ஆலோசனைக் கூட்டத்தில்தான் முடிவெடுப்போம்" என்றார்.
திமுகவில் தங்களைச் சேர்த்துக் கொள்ளாவிட்டால், சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்பாய்லராக மாறுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள். ஏற்கெனவே 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டி வேட்பாளர்களை நிறுத்தியது போல இம்முறை நிறுத்துவது அல்லது தனிக்கட்சி தொடங்கி திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது என்று திட்டமிட்டுள்ளார்கள் அழகிரி ஆதரவாளர்கள். அதனை ஜனவரி 30-ம் தேதி நடைபெறும் தனது 70-வது பிறந்த நாளில் அழகிரி சூளுரையாக வெளியிடுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், தென்மாவட்டத் திமுகவின் நிலைப்பாடோ, அழகிரியின் எந்தச் செயல்பாடும் பொருட்படுத்தத் தக்கதல்ல என்பதாகவே இருக்கிறது.