

புதுச்சேரியில் 4-வது நாளாக இன்று கரோனா தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. புதிதாக 25 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (நவ. 15) கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் 475 பேருக்குப் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 13 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும், மாஹேவில் 11 பேருக்கும் என மொத்தம் 25 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
மேலும் உயிரிழப்பும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 608 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 ஆகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 324 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் மருத்துவமனைகளில் 289 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 984 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 95 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 732 (95.62 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3 லட்சத்து 61 ஆயிரத்து 101 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 3 லட்சத்து 19 ஆயிரத்து 812 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக, இன்று 4-வது நாளாக கரோனா தொற்று 100-க்கும் கீழ் குறைந்தது.
மேலும், கடந்த 2 நாட்களாக உயிரிழப்பும் இல்லை. சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கையும் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் மக்களிடம் கரோனா குறித்த அச்சம் வெகுவாக குறைந்துள்ளது. இருந்தபோதிலும் முக்ககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.