

தீபாவளி தினத்தில் கைகளில் சானிடைசர் தடவிய பின்பு பட்டாசு வெடிக்கலாமா என்பது குறித்து அரசு மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயப் பிரிவு தலைமை மருத்துவர் ரமா தேவி, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''அனைத்து மக்களும் பாதுகாப்பாகத் தீபாவளியைக் கொண்டாட வேண்டும். கரோனாவால் எல்லா ஆண்டுகளையும் விட இந்த முறை தீபாவளிப் பண்டிகை புதிய அனுபவமாக இருக்கும். தொற்று தற்போது குறைந்திருந்தாலும் பாதுகாப்புடன் தீபாவளியைக் கொண்டாட வேண்டியது அவசியம். முகக் கவசத்தைக் கட்டாயம் அணிய வேண்டும்.
கைகளில் சானிடைசரைத் தடவிக் கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. சானிடைசர்களில் ஆல்கஹால் கலந்திருப்பதால் அவற்றுக்குத் தீப்பற்றக்கூடிய தன்மை உண்டு. அதனால் பட்டாசுகளை வெடிக்கும்போது, சானிடைசரைப் பயன்படுத்த வேண்டாம். வெடித்து முடித்த பிறகு கைகளைச் சோப்பு போட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம் என்பதால் புகையைத் தவிர்ப்பது நல்லது. இதய பாதிப்பு உள்ளவர்களுக்காகச் சத்தம் வரக்கடிய வெடிகளைத் தவிருங்கள். கூடுதல் ஒலி, ஒளியைக் கொடுக்கும் பட்டாசுகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது'' என்று மருத்துவர் ரமா தேவி தெரிவித்தார்.