

புதுச்சேரியில் இன்று புதிதாக 66 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (நவ. 12) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரியில் 3,545 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-50, காரைக்கால்-6, ஏனாம்-1, மாஹே-9 என மொத்தம் 66 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெங்கட்டா நகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 58 வயதுப் பெண் ஜிப்மரிலும், காரைக்கால் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 36 ஆயிரத்து 179 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 726 பேர் வீடுகளிலும், 345 பேர் மருத்துவமனைகளிலும் என மொத்தம் 1,071 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 69 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 501 (95.36 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3 லட்சத்து 51 ஆயிரத்து 706 பரிசோதனைகள் செய்துள்ளோம். இதில், 3 லட்சத்து 9,883 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".
இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.