

காரைக்கால் மாவட்டம் விழிதியூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சந்தைவெளி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு இன்று (நவ.11) நடைபெற்றது.
புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திரவுபதியம்மன் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துவிட்டதால் மீண்டும் குடமுழுக்கு செய்யக் கிராம மக்கள், கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இந்நிலையில் புதுச்சேரி அரசின் நிதி மற்றும் நன்கொடை மூலம் ரூ.12 லட்சம் செலவில் திருப்பணிகள் கடந்த ஓராண்டாக மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவுபெற்று குடமுழுக்குக்காக 2 கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.
இன்று காலையுடன் யாக பூஜைகள் நிறைவு பெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணியளவில் குடமுழுக்கு செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
குடமுழுக்கு விழாவில் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அ.சிவசங்கரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.