

எதிர்க்கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிஹாரில் மோடி அலை எதுவும் வீசவில்லை, மோடி அலை என்பது ஒரு மாயை என புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கருத்துக் கூறியுள்ளார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள பூங்காவில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நாராயணசாமி கூறியதாவது:
”புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 96 சதவீதம் பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.6 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 14.5 லட்சம் மக்கள்தொகையில், இதுவரை 3.5 லட்சம் பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கணக்குப்படி 5 சதவீத மக்களுக்குப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால், புதுச்சேரியில் 23 சதவீத மக்களுக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது.
அதிக அளவில் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டதால் இந்தியாவிலேயே 96 சதவீதம் குணமடைந்தோர் உள்ள மாநிலமாகவும், அதிக அளவில் பரிசோதனை செய்த மாநிலமாகவும் புதுச்சேரி உள்ளது. இதற்கு மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள், தொடர்புடைய துறையினர் அனைவரும் நன்றிக்குரியவர்கள்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புகள் கிடைக்காத நிலை காரணமாக, புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடுவதற்காகத் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
அரசாணை வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், இது கொள்கை முடிவு எனக் கூறி ஆளுநர், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். தமிழகத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் ஆளுநர் ஒப்புதல் அளித்தார். ஆனால், புதுச்சேரி ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது விதிகளுக்குப் புறம்பானது.
இது தொடர்பாகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தன. துணைநிலை ஆளுநர் தவறாக மத்திய அரசுக்கு இந்தக் கோப்பை அனுப்பி வைத்துள்ளார். ஆகவே அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாக இருப்பதாக அனைத்துக் கட்சியினர் தெரிவித்தனர்.
ஆனால், நேற்று (நவ.10) துணைநிலை ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்த பாஜக உறுப்பினர்கள், இது கொள்கை முடிவு என மாற்றிப் பேசுகின்றனர். இதில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர், உள்துறைச் செயலரைச் சந்தித்து ஒப்புதல் அளிக்குமாறு கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் நீதிமன்றம் சென்றால், அரசு அவர்களுக்குச் சாதகமாக இருக்கும். துணைநிலை ஆளுநர் இதனைத் தடுப்பது ஏன்?
மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாத நிலை, துணைநிலை ஆளுநரின் குறுக்கீடு, செயல்படாத எதிர்க்கட்சி இவற்றையெல்லாம் சமாளித்து 9 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளோம். சிறப்பான செயல்பாட்டுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளோம். கரோனா நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.10 கோடி மட்டுமே அளித்தது. ஆனால் புதுச்சேரி அரசு ரூ.400 கோடி செலவு செய்துள்ளது.
ஓரிரு நாட்களுக்கு முன்னர் காரைக்கால், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது காற்றின் வேகத்தால் திசை மாறிச் சென்றதால், இலங்கைக் கப்பற்படையால் பிடிக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினேன்.
மாவட்ட ஆட்சியரும் தூதரகத்துடன் பேசியுள்ளார். இந்நிலையில், மீனவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அவர்கள் நாளை காலைக்குள் வந்து சேர்வார்கள். இலங்கையில் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த காரைக்காலைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் உடலைக் காரைக்காலுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வாக்குப்பதிவு இயந்திரக் குளறுபடிகள் குறித்து அனைத்துக் கட்சிகளும் பல்வேறு விமர்சனங்கள், கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், அவற்றைத் தவிர்ப்பதற்கு வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்றுவதே எல்லாச் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்வதாக அமையும்.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடாக மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற முயல்வது தொடர்பாக எழுந்த புகார்கள் குறித்து ஜிப்மர் இயக்குநரிடம் தெரிவித்துள்ளேன். புதுச்சேரி ஆட்சியரிடமும் இது தொடர்பாக விசாரித்து, புதுச்சேரி மாநிலத்தைச் சேராதவர்கள் யாரும் தவறான முறையில் இடம்பெற்றிருந்தால் அதை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஜிப்மர் இயக்குநரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
பிஹாரில் மோடியின் அலை வீசியிருந்தால் பாஜகவை விட ராஷ்டிரிய ஜனதா தளம் அதிக இடங்களில் வென்றது எப்படி? இரு கூட்டணிகளுக்குமான இடைவெளி குறைவாக இருப்பது ஏன்? பிஹாரில் மோடி அலை வீசவில்லை. அது ஒரு மாயை. மக்கள் மத்தியில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் உள் நோக்கத்துடன் தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை நடத்துகிறது. புதுச்சேரியில் இதற்கு அனுமதி அளிக்கப்படாது.”
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.