

புதுச்சேரியில் இன்று புதிதாக 102 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (நவ.10) கூறும்போது, "புதுச்சேரியில் 3,721 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில்-57, காரைக்கால்-10, ஏனாம்-2, மாஹே-33 என மொத்தம் 102 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 604 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 36 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 728 பேர் வீடுகளிலும், 343 பேர் மருத்துவமனையிலும் என மொத்தம் 1,071 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 113 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 325 (95.35 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3 லட்சத்து 44 ஆயிரத்து 64 பரிசோதனைகள் செய்துள்ளோம். இதில், 3 லட்சத்து 29 ஆயிரத்து 1 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
தற்போது தீபாவளிப் பண்டிகைக் காலம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்வது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.