

மமக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து தமிமுன் அன்சாரி நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுக்குழு வில் நேற்று அறிவிக்கப்பட்டது. மமகவுக்குள் பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் அமைப்பாக மனிதநேய மக்கள் கட்சி (மமக) கடந்த 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அக்கட்சிக்கு ஜவாஹிருல்லா உட்பட 2 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்த மமக, சில மாதங் களுக்கு முன்னர் மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தில் இணைந்தது. அந்தக் கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தபோது, அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறிய ஜவாஹிருல்லா, அந்த கூட்டியக்கத்திலிருந்து மமக வெளியேறுவதாக அறிவித்தார்.
இந்த சூழலில், மமகவின் அவசர பொதுக்குழுக் கூட்டத்தை நேற்று கூட்டு வதாக ஜவாஹிருல்லா அறிவித்தார். இந்நிலையில் மமக பொதுச் செய லாளர் தமிமுன் அன்சாரி, போட்டி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்தார்.
இத்தகைய பரபரப்பான சூழலில் ஜவாஹிருல்லா ஏற்பாடு செய்த பொதுக்குழுக் கூட்டம் சென்னை தாம் பரத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத் துக்கு கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி தலைமை வகித்தார். கட்சி யின் பொதுச் செயலாளர் பதவியிலி ருந்து தமிமுன் அன்சாரியும், இணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஆருண் ரஷித்தும் நீக்கப்படுவதாக இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மமகவின் புதிய பொதுச் செயலாளராக அப்துல் சமது தேர்வு செய்யப்பட்டார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, “எங்கள் கட்சி பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் கட்சியை பிளவுபடுத்த முயற்சித் தனர். அந்த முயற்சியை நாங்கள் முறியடித்துள்ளோம். இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் யார் என்ற விவரத்தை விரைவில் அறிவிப்பேன். எங்கள் கூட்டத்தில் 95 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். பாஜக அல்லாத கூட்டணியில் தேர்தலை சந்திப்போம்” என்றார். பொதுக் குழுவில் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிஃபாயி, அமைப்புச் செயலாளர்கள் பி.நெலோஸ்கோ, ஆர்.சரவண பாண்டியன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
ஜவாஹிருல்லாவுக்கு அதிகாரம் இல்லை: அன்சாரி
தமிமுன் அன்சாரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கட்சிப் பொறுப்பிலிருந்து என்னை நீக்க ஜவாஹிருல்லாவுக்கு அதிகாரம் இல்லை. மமகவின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், சீமான், திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும், நாங்கள் ஏற்பாடு செய்த பொதுக் குழுவை ரத்து செய்தோம். ஆனால், அந்த நல்லெண்ணம் ஜவாஹிருல்லாவிடம் இல்லை.
எனது பின்னணியில் பிற கட்சிகள் எதுவும் இல்லை. எனக்கு ஆதரவாக 8 அமைப்பு செயலாளர்களும், 46 மாவட்டச் செயலாளர்களும் உள்ளனர். எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம். இந்த பிரச்சினையை சட்டப்பூர்வமாகவும் அணுகுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிமுன் அன்சாரிக்கு ஆதரவாக மமக அமைப்புச் செயலாளர்கள் மன்னை செல்லசாமி, மெளலா எம்.நாசர், ராவுத்தர்ஷா, கே.எம்.மைதீன் உலவி, எஸ்.எஸ்.நாசர் உமரி உள்ளிட்டவர்கள் உள்ளனர்.