

மதுரையில் கரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கு தொடங்கியது முதலே முகக்கவசம் அணிதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வை நகர் காவல்துறையினர் மேற்கொண்டனர்.
முகக்கவசம் அணியாதது உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதாக இதுவரை நகரில் 46,477 வழக்குகள் பதிவு செய்து, ரூ. 88,77, 330 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி புத்தாடைகள் போன்ற பொருட்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் முகக்கசவம் அணிவதை மீறாமல் இருக்க, நகர் காவல்துறை புதுமையான, தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, திலகர்திடல், விளக்குத்தூண் காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா நெட்வொர்க்கை பயன்படுத்தி முகக்கவசம் அணியாத அல்லது தவறாக அணிந்துள்ள மக்களைக் கண்டறிந்து, அவர்களின் விதிமீறலை புகைப்படத்துடன் கூடிய ஓர் எச்சரிக்கையை ‘ஆன்ட்ராய்டு ஃபோன் அப்ளிகேஷன்’ உதவியோடு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியின் கைபேசிக்கு அனுப்பும் வகையிலான மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் செயல்பாட்டை திலகர்திடல் காவல் நிலையத்தில் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா நேற்று தொடங்கி வைத்தார்.
அவர் கூறியது: இந்த புதிய செயல்பாட்டால் விதிமீறுவோரை ஆதாரத் துடன் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த மென் பொருள் உதவும்.
மேலும், சிசிடிவி கேமரா நெட்வோர்க்கை மேம்படுத்துவதன் மூலம் முகக்கவசம் அணியாதவர்களைக் கண்காணித்து, ஆதாரத்துடன் வழக்கு பதிவு செய்யப்படும்.
இதன்மூலம் கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மதுரை காவல்துறை பங்கேற்கிறது. பெங்களூர் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலமே விதி மீறலுக்கான இந்த காணொளி பகுப்பாய்வு தீர்வினை கொண்டு வந்துள்ளோம்.
இந்த மென்பொருளைப் பயன்படுத்தி சோதனை அடிப் படையில் முதல்கட்டமாக இரு காவல் நிலைய எல்லை யிலுள்ள 40 சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
மேலும், நகரில் பிற பகுதிகளுக்கும், குறிப்பாக மக்கள் நெருக்கமான இடங் களுக்கும் விரிவுப்படுத்தப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடு வோரை மிக விரைவாகக் கண்டறியவும் இந்த காணொளி பகுப்பாய்வு செயல்முறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மதுரை நகர்க் காவல்துறையை தொழில்நுட்ப ரீதியாக வலுப் படுத்தவோம்.
இவ்வாறு ஆணையர் கூறினார்.
நிகழ்ச்சியில் துணை ஆணையர் சிவபிரசாத், தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வாளர் சுந்தரவடிவு உள்ளிட்ட காவல்துறையினர் பங் கேற்றனர்.