மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து

மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு டிச.1-ம் தேதி முதல் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்து ஏற்படுத்தப்பட்ட குழுவினருடன், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் இதர சங்க நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இறுதியாக ஊழியர்களுக்கு, 2023-ம் ஆண்டு டிச.1-ம் தேதி பெறும் ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வும், அதே நாளில் 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு பணிப் பலனாக, அந்த நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் ஊதிய உயர்வும் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது.

மேலும் 2023-ம் ஆண்டு டிச.1-ம் தேதி 10 வருடங்கள் பணி முடித்த அலுவலர்களுக்கு, அந்த நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் பணிப் பலனாக வழங்குவது எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும், அலுவலர்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை சிறப்புப்படி வழங்கவும் ஆணையிடப்படுகிறது.

சுமுக முடிவு எட்டப்பட்டது: இந்த அறிவிப்பை தொடர்ந்து, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அலுவலர் சங்கம் நிர்வாகிகள் ஆகியோர் நேற்று (மார்ச் 13) தமிழ்நாடு மின்வாரிய தலைவர் முன்னிலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது.

இவ்வூதிய உயர்வு மூலம் ஏற்படும் நிலுவைத் தொகை 2023-ம் ஆண்டு டிச.1-ம் தேதி முதல் கருத்தியலாகக் கணக்கிட்டு, 2025-ம் ஆண்டு டிச.1 முதல் பணப் பலன்கள் வழங்கவும். இடைப்பட்ட காலத்துக்கு 2023-ம் ஆண்டு டிச.1-ம் தேதி முதல் 2025-ம் ஆண்டு நவ.30 வரை கருணைத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.500/- வீதம் கணக்கிட்டு 24 மாதங்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2025-ம் ஆண்டு டிச.1 முதல் இந்த ஆண்டு பிப்.28-ம் தேதி வரை வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை ஒரே தவணையாக வழங்கவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து
கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in