

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பெண் ஊராட்சித் தலைவரை அரிவாளால் வெட்டிக் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், ஊராட்சி உறுப்பினர் உள்ளிட்ட 6 பேரின் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்து உத்தரவிட்டது.
தாழையூத்து ஊராட்சித் தலைவராக 2006 முதல் 2011 வரை இருந்தவர் கிருஷ்ணவேணி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவரை ஊராட்சி உறுப்பினர் சுப்பு என்ற சுப்பிரமணியன் சாதிரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், கழிப்பறை கட்டும் விவகாரத்தில் இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 2011 ஜூன் 13-ம் தேதி கிருஷ்ணவேணியை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டித் தாக்கிவிட்டு தப்பியது. இதில் கிருஷ்ணவேணியின் கை விரல்கள் துண்டான நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.
இது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை நெல்லை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே ஒருவர் உயிரிழந்தார். விசாரணை முடிவில், சுப்பு என்ற சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், கார்த்திக், ஜேக்கப், பிரவீன்ராஜ், விஜயராமமூர்த்தி ஆகிய 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.7.60 லட்சம் அபராதமும் விதித்து 2024 அக். 8-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கிலிருந்து 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, தண்டனையை ரத்து செய்யக் கோரி 6 பேரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், ஆர்.பூர்ணிமா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கிருஷ்ணவேணி தரப்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிடும்போது, “மனுதாரர்கள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணவேணி தற்போது 75 சதவீத மாற்றுத் திறனாளியாக உள்ளார்” என்றார்.
இதையடுத்து, மனுதாரர்கள் 6 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையை உறுதி செய்தும், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.