

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பார்கள் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையானது பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கரோனா தொற்றுப் பரவல் தடுப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் இன்று (நவ. 8) இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியை நடத்தியது.
இந்தப் பேரணியை முதல்வர் நாராயணசாமி, வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரோனா தொற்று உலக அளவில் பரவி வருகிறது. இந்தியாவிலும் பல மாநிலங்களிலும் குறைந்திருந்த கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். தற்போது முகக்கவசம் அணிவது மட்டும்தான் மக்களுக்கு ஒரே மருந்தாகும். எனவேதான், பேரிடர் மீட்புத் துறையானது ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகைக் காலம். இந்த நேரத்தில் கரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே இந்த விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
இப்போது கரோனா தொற்றின் தாக்கம் புதுச்சேரியில் குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 95 சதவீதமாக உள்ளது. மருத்துவம், வருவாய், பொதுப்பணி, உள்ளாட்சி, காவல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசின் உதவியோடு புதுச்சேரியில் கரோனா தொற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களது தலைமையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நல்ல நட்பு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் இந்தியாவைச் சேர்ந்த பல லட்சம் பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவர்களுக்கு ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.