

பாஜகவின் வேல் யாத்திரையின் நோக்கமே மதக்கலவரத்தை உருவாக்குவதுதான் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை, தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் டெங்கு நோய் உருவாக்கும் கொசுப்புழுக்களை அகற்றும் நிகழ்ச்சி லெனின் வீதியில் உள்ள மணிமேகலை அரசு பெண்கள் பள்ளி அருகே இன்று (நவ. 6) நடைபெற்றது.
சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி டெங்கு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில், ஜான்குமார் எம்எல்ஏ மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் மழைக்காலங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்குவதால் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகி மிகப்பெரிய அளவில் டெங்கு காய்ச்சலை பரப்புவதால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. பக்கத்து மாநிலமான தமிழகத்திலும் இதேநிலை நீடித்து வருகிறது. எனவேதான், மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
செப்டம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை டெங்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதற்கு சீதோஷ்ண நிலை, மழைப்பொழிவு, பள்ளமான பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பது போன்ற காரணங்களால் ஏடிஸ் கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரவுகிறது. இதுசம்பந்தமாக நகரம் மற்றும் கிராமப்புற பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது. அதேபோல், பல பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெறும். டெங்கு காய்ச்சல் வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ல் 490 பேர், 2017-ல் 4,568 பேர், 2018-ல் 581பேர் 2019-ல் 2,038 பேர் பாதிக்கப்பட்டனர்.
2020-ல் இதுவரை 572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும் கூட டெங்கு பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்குத் தேவையான மருந்துகள், உபகரணங்கள் ஆயத்த நிலையில் இருக்கின்றன.
பேரிடர் மேலாண்மை துறை மூலமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பே பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்தித் தெளிவான முடிவுகளை எடுத்துள்ளோம். அதன்படி, வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி, கொம்யூன் மற்றும் நகராட்சிகள், பொதுப்பணி, மீன்வளம், ஆதிதிராவிடர், கல்வி மற்றும் மின்துறை என ஒவ்வொரு துறையிலும் கட்டுப்பாட்டு அறையை அமைத்து, அங்கு வரும் புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாழ்வான பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றவும், நோய் பரவாமல் இருக்க மருந்து அடிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். புதுச்சேரியில் உள்ள அனைத்துத் துறைகளும் வருகிற மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளன.
புதுச்சேரி அமைதியான மாநிலம். எம்மதமும் சம்மதம் என்ற மாநிலம். எல்லா மதத்துக்கும் முன்னுரிமை கொடுக்கும் மாநிலம். மதக்கோட்பாட்டை கடைப்பிடிப்பதால் யாருக்கும் பிரச்சினை கிடையாது. ஆனால், அது மதக்கலவரமாக வரக்கூடாது. பாஜகவின் வேல் யாத்திரையின் நோக்கமே மதக்கலவரத்தை உருவாக்குவதுதான். புதுச்சேரியை பொறுத்தவரை எந்தவிதமான மதக்கலவரத்தக்கும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்".
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.