

தென்மாவட்டங்களில் பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது என தென்மண்டல ஐஜியிடம் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளன.
திராவிடர் விடுதலைக்கழக மதுரை மாவட்ட செயலர் மணியமுதன் உள்ளிட்டோர் மதுரையிலுள்ள தென்மண்டல காவல்துறை ஐஜி அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், கரோனா ஊரடங்கு விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் வன்முறையை தூண்டும் விதமாகவும் பாஜகவினர் நவ., 6 முதல் டிச.,6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்திட திட்டமிட்டுள்ளனர்.
இந்த யாத்திரையால் சட்டம், ஒழுங்கு சீர்குலையும் சூழல் உள்ளது. வேல் யாத்திரைக்கு தென்மாவட்டங்களில் காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது என, அனைத்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.